×

தேர்தல் பணியில் அதிகாரிகள் மணல் கொள்ளை ஜரூர்

உடுமலை, மார்ச் 26: வருவாய்த்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால் உடுமலை பகுதியில் மணல் கொள்ளை மும்முரமாக நடக்கிறது.
 உடுமலையில்  அமராவதி ஆற்றுப்படுகையிலும், பாலாறு, நல்லாறு படுகையிலும் மணல் திருட்டு  பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர்  அவ்வப்போது ரோந்து சென்று மணல் கொள்ளையர்களை பிடிக்கின்றனர். அமராவதி  ஆற்று மணலை அள்ளி, தோட்டங்களில் குவித்து வைத்து ஒரு பை மணல் 75 ரூபாய்க்கு  விற்கின்றனர். ஆண்டியூர், தேவனூர்புதூர் பகுதியில் பாலாறு, நல்லாறு,  நவ்வாலோடை, சின்னப்பம்பாளையம் பகுதியில் தினசரி லாரிகளில் மணல்  கடத்தப்படுகிறது. ஒரு லாரி மணல் ரூ.35 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. மக்களவை  தேர்தலையொட்டி, வருவாய்த்துறையினர் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளனர்.  

பறக்கும்படை அமைத்து ரொக்கமாக கொண்டு வருபவர்களை பிடிப்பதில் கவனம்  செலுத்தி வருகின்றனர். இதனால் மணல் கொள்ளை நடக்கும் பகுதியில் கண்காணிப்பு  இல்லை. அதிகாரிகள் யாரும் வராததால் மணல் கொள்ளை ஜரூராக நடக்கிறது. இந்நிலையில், நேற்று தளி போலீசார் ரோந்து சென்றபோது, சின்னப்பம்பாளையத்தில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். தற்போது  வெயில் காலம் என்பதால் கட்டுமான பணிகள் மும்முரமாக நடக்கிறது. மணல் தேவை  அதிகரித்துள்ளதால், தங்கு தடையின்றி மணலை அள்ளி விற்று லட்சக்கணக்கில்  சிலர் சம்பாதித்து வருகின்றனர். இதை தடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பிளஸ் 2 தேர்வில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை