பாலக்காடு அருகே ஆதிவாசி பெண் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்தவர் கைது

பாலக்காடு, மார்ச் 26: கேரள-தமிழக எல்லை கோவிந்தாபுரத்தை அடுத்த செம்மணாம்பதி அழகாபுரி காலனியைச் சேர்ந்த ஆதிவாசி பெண் கவிதா(48), கூலி தொழிலாளி. இவரது கணவன் கடந்த நான்கு ஆண்டிற்கு முன் இறந்தார். இவருக்கு சுரேஷ் என்ற மகனும், ராதிகா, பபிதா, சுகு என்ற மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கவிதா கடந்த 3ம் தேதி புளியகண்டி என்ற இடத்திலுள்ள அப்துல்ரகீம் என்பவரது தோப்பிற்கு வேலைக்கு சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ், கவிதாவை தேடினார். அவர் பற்றி தகவல் கிடைக்காத நிலையில் கொல்லங்கோடு போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார்.

இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அதே தோட்டத்தில் வேலை பார்த்து வந்த மணியன்(எ)மணிகண்டன்(34) மார்ச் 3ம் தேதிக்கு பிறகு பணிக்கு வரவில்லை என தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் மணியன் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, மணியன் செம்மணாம்பதியை அடுத்துள்ள அட்டையாம்பதியில் ஒரு மரமில்லில் வேலை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சென்ற இன்ஸ்பெக்டர் பென்னி தலைமையிலான போலீசார் மணியனிடம் விசாரணை நடத்தினர்.

இதில் சம்பவத்தன்று புளியகண்டி தோப்பில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த கவிதாவிற்கு மணியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மணியன் அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் கவிதாவின் தலையில் தாக்கி கொலை செய்தார். பின் கவிதாவின் உடலை தோட்டம் அருகே உள்ள வாய்க்கால் பகுதியில் புதைத்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் கவிதாவின் உடல் ஆர்.டி.ஓ., ரேணு தலைமையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: