×

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்., தேமுதிக உள்பட 12 பேர் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் என்பதால் எண்ணிக்கை கூடும்

திருச்சி, மார்ச் 26:  திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் உள்பட 12 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 3 சுயேட்சைகள் உள்பட ஏற்கனவே 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பர்மா காலனியை சேர்ந்த பாலமுருகன் (40), இந்திய கிறிஸ்தவ முன்னணி ஏசுதாஸ் (55), தேசிய அருந்ததியர் கட்சி மாநில தலைவர் சுந்தர்ராஜன் (50), ஆகியோர் அடுத்தடுத்து திருச்சி தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சிவராசுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் 12.30 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்பி, பாஜ மாவட்ட தலைவர் தங்கராஜையன் ஆகியோரும் வந்திருந்தனர்.பகல் 12.30 மணிக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தனது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது 100 மீட்டர் தூர எல்லை கட்டப்பாடு கோட்டில் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பின்னர் வேட்பாளர் திருநாவுக்கரசர், திருச்சி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பெரியண்ணன் அரசு, திருநாவுக்கரசரின் உதவியாளர் ரவி ஆகியோர் கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்றனர். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சிவராசுவிடம் திருநாவுக்கரசர் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மகன் அன்பரசன் மனு தாக்கல் செய்தார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் வந்தார்.
நேற்று மட்டும் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், மாற்று வேட்பாளராக அவரது மகன் அன்பரசன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாலமுருகன், தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன், மாற்று வேட்பாளராக டிவி கணேஷ், சுயேச்சைகளாக ஏசுதாஸ், சுந்தர்ராஜன், அருணாச்சலம், திருநாவுக்கரசு, இளங்கோவன், செல்லபெருமாள், முருகானந்தம் ஆகிய 12 பேர் ஒரே நாளில் திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சிவராசுவிடம் மனு தாக்கல் செய்தனர். அமமுக, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சியினர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

அவர்கள் இன்று மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.முக்கிய வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்ததால் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் ஆபீஸ் வரை உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கலெக்டர் அலுவலக ஊழியர்களும் தங்கள் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Tags : constituency ,TRC ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...