×

பராமரிப்பில்லாத மைதானம் விளையாட முடியாமல் மாணவர்கள் அவதி

ராமநாதபுரம், மார்ச் 26: முத்துவயல் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி கிடப்பதால், மாணவர்கள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் கிராமப்புற விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடும் வகையில் சறுக்குகள், சீ ஷா, பார் விளையாட்டு, வாலிபால் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இக்கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைத்ததோடு சரி, பஞ்சாயத்து நிர்வாகம் பராமரிக்க வில்லை. அதனால் காட்டுக்கருவேல மரங்கள் அடர்ந்தும், புதர்மண்டியும் கிடக்கிறது. இங்கு விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும், பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள், குழந்தைகளுக்காக விளையாட்டு ஆர்வம் கேள்விக்குறியாகி உள்ளது.

அரசு நிதியும் பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. இதேநிலைதான் பல கிராமங்களில் உள்ளது. இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதுபோன்ற விளையாட்டு மைதானங்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த சந்திரன் கூறுகையில், கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் விடுமுறை காலத்தில் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். விளையாட இடம் கிடைக்காமல் வறண்டுபோன குளம், ஊரணி பகுதிகளில் விளையாடுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் மாணவர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும என்று கூறினார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை