×

மதுரை அரசு மருத்துவமனையில் குடிநீருக்கு ஏங்கி தவிக்கும் நோயாளிகள்- உறவினர்கள் டீன் - கலெக்டர் - கமிஷனரின் கூட்டு நடவடிக்கை தேவை

மதுரை, மார்ச் 26: தென்மாவட்ட அளவில் மிகப்பெரிய மருத்துவமனையான மதுரை அரசு மருத்துவமனையில் 4 ஆயிரத்து 500 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 10 ஆயிரம் பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். உள் நோயாளிகளுடன் உறவினர்களும் தங்கி உள்ளனர். ஒரு நோயாளிக்கு இருவர் வீதம் வைத்துக்கொண்டால் கூட 9 ஆயிரத்து 500 பேர் மருத்துவமனையில் தினமும் தங்குகின்றனர். மேலும் வெளிநோயாளிகளுடன் உறவினர்கள் சிலரும் வந்து செல்கின்றனர். இதனால் இம்மருத்துவமனை தினமும் சராசரியாக 20 ஆயிரம் பேரை சந்திக்கிறது. இவர்கள் மருத்துவமனை வளாகத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குடிநீரை காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலை இருப்பதால், மருத்துவமனை பகுதியில், தரமில்லாத குடிநீர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
மருத்துவமனையில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க யாரும் நடவடிக்கை எடுப்பதாக ெதரியவில்லை. குடிநீர் கிடைக்காமல் அலையும் நோயாளிகள் அவர்களது உறவினர்களைப் பற்றி, மருத்துவமனை அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அல்லது பொதுநல அமைப்பினரோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. தற்போது கோடை காலம் துவங்கிவிட்டது. நகர் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் குடிக்க கிடைக்காமல் நோயாளிகள் உள்ளிட்டோர் படும்பாடு பரிதாபத்திற்குரியது. வசதி படைத்தோர் காசுக்கு வாங்கி தாகத்தை தணித்து விடுகின்றனர். நடுத்தர மற்றும் வசதி இல்லாதோர் குடிநீரைத் தேடி, மருத்துவமனைக்குள் அலையாய் அலைகின்றனர். நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கூறும்போது, ‘‘மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அவர்களுடன் இருக்கும் உறவினர்களுக்குகு குடிநீர் வழங்க வேண்டியது அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் கடமையாகும். சுட்டெரிக்கும் தட்பவெட்ப நிலையில், குடிநீருக்கு ேநாயாளிகள் படும் கஷ்டத்தை மனதில் கொண்டு, டீன் உடனடியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும். குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, பிணவறை பகுதி உள்ளிட்ட குறைந்தது 10 இடங்களிலாவது, சின்டெக்ஸ் தொட்டிகளை வைத்து, மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீரை நிரப்ப வேண்டும். குடிநீர் பிரச்னையை தீர்க்க, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் டீன் ஆகியோர் இணைந்து, ஆக்கப்பூர்வமான கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்’’ என்றனர்.

Tags : Commissioner ,Government Hospital ,Relatives ,Madurai ,
× RELATED கலைஞர் 101வது பிறந்தநாளையொட்டி அரசு...