சிதிலமடைந்த ஆதிச்சமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் புனரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

வலங்கைமான்.மார்ச்26: வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள புரதான கோயில்களை சீரமைக்க தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்  மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பழமை வாய்ந்த புரதான கோயில்கள் பல உள்ளன. இவைகள் பல்வேறு காலகட்டங்களில் இயற்கையின் இடர்பாடுகளால் கால சக்கரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பழுதடைந்து விட்டது. போதிய பராமரிப்பின்மை, போதிய வருவாய் இல்லாத காரணங்களால் இக்கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வருகின்றது. தற்போது பலநூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட் கோயில்களில் சில தனது அடையாளங்களை மக்களுக்கு பறை சாற்றும் விதமாக சிறிதளவே உள்ளது.

    அந்தவகையில் வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமம் அக்ரஹாரம் பகுதியில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட  பழமையான  லட்சுமி நாராயணபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த சுற்றுச்சுவர், முன்பக்க மண்டபம், சமையலறை, வாகனமண்டபம் உள்ளிட்டவை  சிதிலமடைந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எஞ்சியுள்ள பகுதிகளும் எப்போது கீழே விழும் என்ற நிலையில் உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக இக்கோயிலில் ஒருகால பூஜைகள்கூட நடைபெறவில்லை. இதுபோன்று வலங்கைமான் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல புரதான கோயில்கள் தன்அடையாளத்தை  இழந்து  ஒரு வேளை பூஜைகள் கூட நடைபெறாமல்  இருந்து வருகின்றது. எனவே அறநிலையத்துறை போதிய வருவாய் இல்லாமல் உள்ள  பழமையான கோயில்களை அடையாளம் கண்டு உரிய நிதி ஒதுக்கீடு செய்து பக்தர்களின் பங்களிப்போடு  பழமை மாறாமல் புனரமைக்க பக்தர்கள்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Lakshmi Narayana Perumal ,
× RELATED தீர்த்தம் இன்றி அமையாது திருக்கோயில்