×

அரசியல் கட்யினர் விருந்தோம்பல் ஆடு, கோழி, மீன் விலை உயர்வு

திருவள்ளூர், மார்ச் 26: தேர்தல் கமிஷன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, அரசியல் கட்சியினர் தொண்டர்களை குஷிப்படுத்த, அசைவ விருந்துகளை நடத்தி வருகின்றனர். இதனால் ஆடு, கோழி, மீன் ஆகியவற்றின் விலையில்  உயர்வு ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியினர் ஆங்காங்கே அசைவ விருந்துகள் நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திற்கு இறைச்சிக்கு தேவையான ஆடுகள் அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு  வரப்படுகிறது.

தற்போது தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி சோதனை காரணமாக, ஆடுகளின் வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல், வெளி மாவட்டங்களில் இருந்து கறிக்கோழிகளையும் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது தொண்டர்களை கவர, பல இடங்களில் வியாபாரிகளிடம் இருந்து, மொத்தமாக கோழி மற்றும் ஆடுகளை வாங்கிச் சென்று விடுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலையில்  உயர்வு ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் வரை ₹130க்கு விற்ற கோழி இறைச்சி தற்போது ₹160 என விற்கப்படுகிறது. இதேபோல், கிலோ ₹500க்கு விற்ற ஆட்டுக்கறி ஏரியாவுக்கு ஏற்ப, ₹540 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின்  விலை அதிகரிப்பால் மீன்களின் விலையும் ரகம் வாரியாக, ₹20 முதல் 50 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு, அரசியல் கட்சியினரின் திடீர் விருந்து உபசரிப்பு தான் காரணம் என, வியாபாரிகள் குற்றம்  சாட்டுகின்றனர்.



Tags : parties ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...