×

குறைந்த மின்அழுத்தத்தால் பழுதான மின்மோட்டாருக்கு மாலை அணிவித்து விவசாயிகள் நூதன போராட்டம்

ஊத்துக்கோட்டை, மார்ச் 26:  அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தத்தால் பழுதான மின்மோட்டாருக்கு மாலை அணிவித்து மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றங்கரை ஒட்டி அனந்தேரி, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், போந்தவாக்கம், வடதில்லை, உப்பரபாளையம் என 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் பெரும்பாலான  விவசாயிகள் நெல், கரும்பு, வேர்கடலை, பூச்செடிகள் பயிர் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் தினமும் 10 முறைக்கு மேல் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்திலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால்  பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தேவைப்படும் மும்முனை மின்சாரம் தடை படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் விவசாயி தாமோதரன் தலைமையில்  20 கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் திரண்டனர். குறைந்த  மின்அழுத்தத்தால் எரிந்து போன ன்மோட்டாருக்கு மாலை அணிவித்து மின்வாரய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முறையாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ‘உயர் அதிகாரிகள் சென்னைக்கு சென்றுள்ளனர்.  அவர்கள் வந்தவுடன் தடையின்  மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதை கேட்ட விவசாயிகள், குறைந்த அழுத்த மின்சாரத்தாலும், அவ்வப்போது மின் தடைபடுவதாலும் மோட்டார்கள் எரிந்து பழுதாகின்றன.  பயிர்களுக்கு போதிய அளவு  தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பயிர்கள் கருகிய நிலையில் உள்ளது என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். மேலும், பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறினர்.  இதனால்  பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த, ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்தன் விவசாயிகளிடம் பேச்கூவார்த்தை நடத்தினார். மேலும், மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு போன்மூலம் தகவல் கொடுத்தார். அதன் பிறகு திருவள்ளூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் குமார், போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம்  வினியோகம் செய்யப்படும்’ என உறுதியளித்தார். அதன்பிறகு அனைவரும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்