×

செங்கம் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர் அதிமுக பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்

செங்கம், மார்ச் 26: செங்கம் பகுதிகளில் பைப்லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. அதிமுக பிரமுகரான குத்தகை தாரர் தரமற்ற பைப்லைன் அமைத்து ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
செங்கம் நகர் மக்களின் வசதிக்காக சாத்தனூர் அணையில் இருந்து ராட்சத பைப்லைன் பூமிக்கடியில் அமைத்து 18 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற ராட்சத பைப்களில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய குறிப்பிட்ட தொகைக்கு குத்தகை விடப்படும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செங்கம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக பிரமுகருமான மணி அதற்கான குத்தகையை எடுத்து உள்ளார்.

இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் செங்கம் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், நகரில் பல இடங்களில் கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன்கள் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து புகார் தெரிவிக்கும்போது குத்தகைதாரர் மணி தரமற்ற பைப்லைனை அமைக்கிறார். இதனால் சில தினங்களில் மீண்டும் பைப்லைன் சேதம் அடைந்து விடுகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, அதிமுக பிரமுகர் பைப்லைன் சரிப்பார்க்கும் பணியை குத்தகை எடுத்துள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், தினசரி செங்கம் நகரில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் உடைந்துள்ள கூட்டு குடிநீர் பைப்லைன்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Chengam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...