×

அரக்கோணம் ரயில்வே கேட்கீப்பரிடம் ெசல்போன் திருட்டு வேலூரில் தொடரும் செல்போன் பறிப்பு சம்பவங்கள்

வேலூர், மார்ச் 26: வேலூர் மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையத்தில் கேட்கீப்பரின் செல்போனை திருடிச் சென்ற 2 பேரை காட்பாடி ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையத்தின் கேட் கீப்பராக ராஜ்பல்லம் குமார்(30) என்பவர் நேற்று முன்தினம் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தண்டவாளத்தை கடந்து வந்த 2 பேர் ரயில்வே கேட்டின் அருகே உள்ள அறையில் இருந்த ₹12ஆயிரம் மதிப்பிலான செல்போனை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அறிந்த ராஜ்பல்லம் குமார் செல்போன் திருடிய 2 பேரை விரட்டிச் சென்றார். ஆனால் செல்போன் திருடிய நபர்கள் இருட்டில் மறைந்து கொண்டனர்.

இதுகுறித்து ராஜ்பல்லம்குமார் நேற்று காட்பாடி ரயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், எஸ்ஐ எழில்வேந்தன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ரயில்வே ஊழியரின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை செல்போன் பறிப்பு சம்பவங்கள் பரவலாக தொடர்ந்து வருகிறது. குறிப்பாக வேலூரில் கடந்த ஒரு வார காலத்தில் 20 முதல் 25 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.

நேற்று காலை வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பைக்கில் சென்ற ஒருவர் வண்டியை நிறுத்தி தனது செல்போன் அழைப்பை ஏற்று பேசி விட்டு செல்போனை பாக்கெட்டில் வைக்கும் போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் செல்போனை பறித்து சென்றனர். அதேபோல் காட்பாடி ரோடு-பழைய பைபாஸ் சந்திப்பில் ஒரு பெண் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம ஆசாமி செல்போனை பறித்து சென்றான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்காடு சாலை சைதாப்பேட்டை முருகன் கோயில் அருகில் லோடு ஏற்றி வந்த லாரி டிரைவரை தாக்கி மிரட்டிய மர்ம ஆசாமிகள் செல்போன், பணம் வைத்திருந்த மணி பர்ஸ் ஆகியவற்றை பறித்து சென்றனர். மேலும் லாங்கு பஜாரில் மக்கள் நெரிசல் மிக்க நேரங்களில் செல்போன் பேசிக் கொண்டு செல்பவர்களிடம் இருந்து அவற்றை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இதுதவிர ஆற்காடு சாலை, மெயின் பஜார், அண்ணா சாலை, சித்தேரி சாலை உட்பட நகரில் கடந்த ஒரு வார காலத்தில் 20 முதல் 25 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றின் மீது போலீசில் புகார் கொடுத்தாலும் வழக்குபதிவு செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களை போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையை சேர்ந்தவர்களிடம் விசாரித்த போது, ‘சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. வரும் புகார்களை பதிவு செய்யும்போது உயர்அதிகாரிகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறோம். அதனால்தான் பெரும்பாலான புகார்களை பெற்றுக் கொண்டு சிஎஸ்ஆர் கூட வழங்காமல் அவர்களை பின்னர் வரச்சொல்கிறோம். கடந்த ஒரு வார காலத்தில் 20 முதல் 25 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது உண்மைதான்’ என்று ஒப்புக் கொண்டார்.

Tags : Cellphone incidents ,Bellary ,
× RELATED பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே...