×

வேகமாக வறண்டு வரும் நீர்நிலைகள் குமரியில் குடிநீர் பற்றாக்குறை அபாயம் முக்கடல் அணையில் 10 அடி தண்ணீரே உள்ளது

நாகர்கோவில், மார்ச் 26:  குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் சுட்டெரிக்கும் வெயில், மார்ச் மாதத்திலேயே தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. பகலில் வெயில் வாட்டி வதைப்பதால், இரவில் கடும் வெப்பம் நிலவுகிறது.  அக்னி நட்சத்திர தொடங்கி விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு பகலில் வெயிலின் கடுமை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் வெயிலின் தாக்கத்தால் பல நோய்களும் பரவி வருகிறது.  வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலையோரங்களில் இளநீர், நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது. அது தவிர பழக்கடைகள், ஜூஸ் கடைகளில் விற்பனை அதிக அளவு இருந்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் வரவேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் வெளியே வரும்போது பருத்தி ஆடைகளை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்குகின்றனர். இது ஒருபுறம் இருக்க வெயிலின் தாக்கத்தால், மாவட்டத்தில் உள்ள குளங்களில் நீர் வற்றி வருகிறது. ஒருசில குளங்களில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இது போல் குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. பேச்சிப்பாறையில் 0.90 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. பெருஞ்சாணியில் 26 அடி தண்ணீர் உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் முக்கடல் அணையிலும் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால் கோடை காலத்தை தண்ணீர் பற்றாக்குறையில்லாமல் கழிக்க முடியுமா? என அச்சமும் உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு 5, 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது, 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 முக்கடல் அணையில் தற்போது 10 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 10 அடிக்கு கீழ் மைனசில் 25 அடி தண்ணீர் உள்ளது. ஆனால் மைனஸ் பகுதியில் 9 அடி தண்ணீர் மட்டுமே குடிநீருக்கு எடுக்க முடியும் நிலை உள்ளது. ஆகமொத்தத்தில் முக்கடல் அணையில் இருந்து இன்னும் 19 அடி தண்ணீர் மட்டுமே குடிநீருக்கு எடுக்க முடியும் என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 840க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 இந்த ஆழ்துளை கிணறுகளில் 100க்கும் மேற்பட்ட கிணறுகள் பழுதாகியுள்ளது. இதனை சரிசெய்து ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீர் சீராக விநியோகம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களில் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. மேலும் பல ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் குறைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் ஒரு நாள் விட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் மட்டும் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குடிநீர் விநியோகம் செய்யப்படும் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags : Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...