×

சரக்கு பெட்டக மாற்று முனையம் கொண்டுவந்து மாவட்டத்தை அழிக்க கூடாது காங். வேட்பாளர் வசந்தகுமார் பேட்டி

நாகர்கோவில்,  மார்ச் 26: சரக்கு பெட்டக மாற்று முனையம் கொண்டு வந்து மாவட்டத்தை அழிக்க  கூடாது என்று கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்  தெரிவித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில்  போட்டியிடுகிறேன். கோட்டாறு மறை மாவட்ட ஆயரை சந்தித்து ஆதரவும்,  ஆசீர்வாதமும் பெற்றேன். கன்னியாகுமரி மாவட்டம் பெருமை வாய்ந்த மாவட்டம்.  இங்கு சரக்கு பெட்டக மாற்று முனையம் கொண்டுவந்து மாவட்டத்தை அழிக்கக் கூடாது  என்பதில் உறுதியாக உள்ளோம். குமரி மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த மீன்  பிடித்துறைமுகம்தான் தேவை. அதுதான் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். மத்திய  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ₹40 ஆயிரம் கோடி மதிப்பில் இங்கு  திட்டங்களை கொண்டுவந்ததாக கூறுகிறார். ₹40 ஆயிரம் கோடி என்று பேப்பரில்  எழுதிகொடுத்தால் அது திட்டம் ஆகாது.

அந்த பணத்தை கடலிலா கொண்டுபோய்  கொட்டினார்கள். அந்த பணத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்று என்று  பட்டியல்போட்டு கணக்கு கொடுக்கட்டும். அவர் ஏற்கனவே பொய்சொல்லி ஆட்சிக்கு  வந்தார். ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கித்தருவதாக ஜூலை  போராட்டம் நடத்தி பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றி பதவிக்கு வந்தார். பிரதமர்  மோடி ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னார். யாருக்கும்  வழங்கவில்லை. எம்.எல்.ஏ.வாக இருக்கும் நான் குமரி மாவட்டத்தில் 1500  பேருக்கு வேலைவாங்கிக் கொடுத்துள்ளேன். மத்திய அரசின் 4 வழி சாலை திட்டம்,  ரயில்பாதை திட்டம் போன்றவை யார் இருந்தாலும் வந்து கொண்டே இருக்கும். அது  ஏற்கனவே திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டி செயல்பாட்டில் இருந்து வருகின்ற  திட்டம். ஆனால் இன்று சாலை திட்டத்திற்காக குளங்களை மண் நிரப்பி  விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்.

நாங்குநேரி  மக்களுக்கு நான் துரோகம் செய்து விட்டதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறுவது  சரியல்ல. அங்குள்ள கால்வாய்களில் தண்ணீர் கொண்டு செல்ல சொந்தகாசில் பொக்லைன் வாங்கி கொடுத்துள்ளேன். கொசு அடிக்கும் மிஷின் வாங்கியுள்ளேன்.  இந்த சேவைகள் குமரி மாவட்ட மக்களுக்கும் கிடைக்கும். நான் நாடாளுமன்ற  உறுப்பினர் ஆனதும் சரக்கு பெட்டக மாற்று முனையத்தை தடுத்து நிறுத்துவதுதான்  எனது முதல் பணி. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன்,  விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பேன். காங்கிரஸ் அரசு ஏழைகளுக்கான  கல்வி உதவித்ெதாகை வழங்குகின்ற எந்த திட்டத்தையும் தடுத்து நிறுத்த  முயலவில்லை. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் அரசாகத்தான் இருந்து  வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்  எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், நகர திமுக செயலாளர்  வக்கீல் மகேஷ், ஷேக்தாவூது, பசலியான், காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள்  பிரின்ஸ், ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன்,  தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், டாக்டர் பினுலால்சிங்,  தாரகை கத்பட் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக வசந்தகுமார் நேற்று  காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.  முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் மோசசையும் சந்தித்து வசந்தகுமார் ஆசி பெற்றார்.

Tags : cargo substitute terminal ,Vasanthakumar ,district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்