×

திருவில்லி, மல்லாங்கிணறில் தேரோட்டம் கோலாகலம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 22: திருவில்லிபுத்தூர் மற்றும் மல்லாங்கிணறில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 5 மணியளவில் ஆண்டாள்-ரெங்கமன்னார் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஆண்டாள் கோயில் முன்பு உள்ள செப்பு தேர் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு செப்பு தேரில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் ‘கோவிந்தா கோபாலா’ கோஷம் விண்ணதிர, நிலையத்தில் இருந்து கிளம்பிய செப்பு தேர் நான்கு ரத வீதிகள் வழியாக ஆடி அசைந்து மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. செப்பு தேரோட்ட நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், வேதபிரான்பட்டர் அனந்தராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.   விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று மாலை ஆண்டாள் கோயில் முன்பு உள்ள திரு ஆடிபூர கொட்டகையில் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆண்டாள் அணிந்துகொள்ள திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டது. இதேபோல் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு ஸ்ரீ செங்கமல தாயார் ஸ்ரீ சென்ன கேசவப்பெருமாள் பங்குனி தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திருச்சுழி தொகுதி  எம்எல்ஏவுமான தங்கம்தென்னரசு வடம்பிடித்து துவக்கி வைத்தார். திருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Tags : stadium ,
× RELATED அணியின் நலனுக்காக புதிய...