×

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 3 நாளில் ஒரு வேட்புமனுகூட வரவில்லை சாத்தூர் இடைத்தேர்தலுக்கு முதல் சுயேட்சை தாக்கல்

விருதுநகர், மார்ச் 22: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கி மூன்று நாட்களாகியும் நேற்று வரை ஒரு வேட்புமனு கூட தாக்கல் செய்யவில்லை. சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முதல் சுயேட்சை வேட்பாளர் நேற்று முதல் வேட்புமனுவை தாக்கல் செய்து கணக்கினை துவக்கி வைத்தார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி துவங்கியது. கடந்த 3 நாட்களாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒருவர் வேட்புமனு கூட தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் துவங்கிய நாள் முதல் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் வளாகம் மற்றும் சாலையின் இருபுறமும் தலா 100 மீ தூரத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலும், வெளிப்பகுதியில் ஏ.எஸ்.பி. சிவபிரசாத் தலைமையில் என 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு மதுரை பழங்காநத்தம் அழகர்சாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் விருதுநகர் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் துவங்கிய நாள் முதல் நேற்று வரையிலான 3 நாட்களாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு வேட்புமனு கூட தாக்கல் செய்யவில்லை. அருப்புக்கோட்டையை சேர்ந்த ஆத்தியப்பன் என்பவர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்ய ஆவணங்களுடன் மதியம் 2.55 மணிக்கு வந்தார். மனு பூர்த்தி செய்யாததை தொடர்ந்து திரும்பி சென்றார். சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களாக கோசுகுண்டு.சீனிவாசன்(திமுக), ராஜவர்மன்(அதிமுக), எதிர்கோட்டை. சுப்பிரமணியன்(அமமுக) அறிவிக்கப்பட்டுள்ளனர்.  அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் யாரும் நேற்று வரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ராஜபாளையம் தாலுகா சோழபுரம்கீழுரை சேர்ந்த  ஜெயராஜ் (54) சுயேட்சையாக முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்து கணக்கினை துவக்கி வைத்தார்.

Tags : constituency ,Virudhunagar Lok Sabha ,independent ,Sathur ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...