திருமங்கலம், மார்ச் 22: திருமங்கலம் வெளியூர் பஸ்ஸ்டாண்ட் அருகே உடைந்து சேதமடைந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தால் பயணிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது. திருமங்கலம் வெளியூர் பஸ்ஸ்டாண்ட் மதுரை ரோட்டில் இயங்கி வருகிறது. பஸ்ஸ்டாண்டிற்கு எதிராக டவுன் போலீஸ்ஸ்டேசனையொட்டியுள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் நீண்டநாள்களாக உள்ளது. கம்பத்தின் அடிப்புறம் துருபிடித்து உடைந்து எப்போதுவேண்டுமானால் துாரோடு உடைந்து கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. இந்த கம்பத்திலிருந்து செல்லும் ஏராளமான மின்சார வயர்கள் வெளியூர் பஸ்ஸ்டாண்டை சுற்றியுள்ள வணிக நிறுவனங்களுக்கு செல்கிறது. இதனால் மின்கம்பம் திடீரென உடைந்து விழுந்தால் பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகள் மற்றும் மதுரை ரோட்டில் செல்லும் பொதுமக்கள் அனைவருக்கும் பெரிய அளவில் ஆபத்தை உண்டாக்கும்.
எனவே மக்கள் உயிருடன் விளையாடாமல் மின்வாரியம் உரிய நேரத்தில் இந்த சேதமடைந்த மின்சார கம்பத்தினை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே திருமங்கலம் மக்களின் கோரிக்கையாகும்.