×

ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவு தேர்வுக்கு 89 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு

புதுச்சேரி, மார்ச் 22: புதுச்சேரி ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு எழுத கடந்த 15 நாட்களில் மட்டும் 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நுழைவுத்தேர்வு நடத்தி வருகிறது. கடந்த 2018ம ஆண்டு ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு எழுத 1,97,745 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்தாண்டு ஜிப்மர் புதுச்சேரி - 150, காரைக்கால் - 50 என மொத்தமுள்ள 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கான நுழைவுத்தேர்வு இரு பிரிவுகளாக ஜூன் 2ம் தேதி இந்தியா முழுவதுமுள்ள 120 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஜிப்மர் இணையதளத்தில் மார்ச் 6ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், மே 5ம் தேதியிலிருந்து ஜூன் 2ம் தேதி காலை 10 மணி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி, நாடு முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் ஜிப்மர் இணையதளத்தில் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வுக்கு ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 6ம் தேதி காலை 11 மணியிலிருந்து 20ம் தேதி வரையிலான 15நாட்களில் மட்டும் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு எழுத 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பிக்க ஏப். 12ம்தேதி வரை கால அவகாசம் உள்ளதால் இந்தாண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பார்கள் என்று  ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : applicants ,entrance examination ,JIPMER MBBS ,
× RELATED என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்