×

விருத்தாசலம் பைபாஸ் சாலையில் மிளிரும் ஒளிவிளக்கு திறப்பு

விருத்தாசலம், மார்ச் 22: விருத்தாசலம் பகுதியில் புதுக்கூரைப்பேட்டை, பொன்னேரி, சித்தலூர், மணவாளநல்லூர் பகுதிகளில் உள்ள பைபாஸ் சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை, ஒளிரும் மின்விளக்குகள், பேரிகார்டுகள் ஆகியவை வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சாலை பாதுகாப்பு நிதி மூலம் கடலூர் தச்சாங்குப்பம் முதல் வேப்பூர் கூட்டுரோடு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில், விபத்தை தடுக்கும் வகையில் ரூ.19.5 லட்சம் செலவில் மிளிரும் ஒளிவிளக்குகள் அமைக்க அரசு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து விருத்தாசலம் பகுதியிலுள்ள புதுக்கூரைப்பேட்டை பைபாஸ் சாலையில் இரு இடங்கள், சித்தலூர் பைபாஸ் சாலை, மணவாளநல்லூர் பைபாஸ் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் மிளிரும் ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் ஏஎஸ்பி தீபாசத்தியன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, கடலூர் மாவட்ட போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் ஞானவேல், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், தனிப்பிரிவு தலைமை காவலர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, புதுக்கூரைப்பேட்டை பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்ட மிளிரும் ஒளிவிளக்குகளை திறந்து வைத்து பேசினார். அப்போது விபத்தில்லா பயணங்கள் அமையவேண்டும் என்பதற்காக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை அளித்து வருகிறோம். அதன்படி விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

Tags : opening ,Vriddhachalam Bypass Road ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா