×

சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்

விகேபுரம், மார்ச் 22:  நெல்லை மாவட்ட சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலமாக நடந்தது.  திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பங்குனி உத்திரத்தன்று இந்துக்கள் குலதெய்வங்களை வழிபடுவது வழக்கம். தங்கள் குலதெய்வங்கள் தெரியாதவர்கள் காரையாறு சொரிமுத்தய்யனார் கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள். நேற்று பங்குனி உத்திரமாக இருந்ததால் ஏராளமானவர்கள் சொரிமுத்தய்யனார் கோவிலுக்கு செல்வதற்காக பாபநாசம் அரசு போக்குவரத்து கழகம் முன் குவிந்தனர். இதனையொட்டி பாபநாசம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தாண்டு வனத்துறையினர் காரையாறு செல்ல ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் வழக்கத்தைவிட பேருந்துகளில் செல்வதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. பாபநாசத்தில் கூட்டம் சேர, சேர பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து சொரிமுத்தய்யனார்கோவிலுக்கு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிதெரிவித்தார். நெல்லை அருகே அழகியபாண்டியபுரம் தெற்கு வாகைக்குளம் குளக்கரையில் அமைந்துள்ள பூர்ணகலா, புஷ்பகலா சமேத ஆனைமேல் அய்யனார் தர்மசாஸ்தா கோவில் நேற்று காலை பங்குனி உத்தர திருவிழா நடந்தது. சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜையும் நடந்தது. தொடர்ந்து மதியம் அன்னதானம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் திராளனவர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாககுழு தலைவர் முப்பிடாதி, திருப்பணிகுழு தலைவர் வேல் சிவனுப்பாண்டியன், துணைத்தலைவர் கோவிந்தராஜ், செயலாளர்கள் பாஸ்கர சேதுராமலிங்கம், மாடசாமி, பொருளாளர் சோமுபாண்டியன், இணைச்செயலாளர்கள் மகாராஜா, சக்திவேல்கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

களக்காடு: களக்காடு அருகே சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் உள்ள அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர விழா கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி சாஸ்தா, மாடசாமி, இந்திரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இதுபோல களக்காடு ஆற்றாங்கரை தெரு சிவனனைந்தபெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை யொட்டி கொடை விழா நடந்தது. விழாவில் சிவனனைந்தபெருமாள், பிரமராட்சி பேச்சி அம்மன், சுடலைமாடசுவாமி, கருப்பசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மாலையில் பக்தர்கள் கோயில் முன் பொங்கலிட்டு வழிபட்டனர். சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். களக்காடு பச்சையாறு அணை பகுதியில் உள்ள சேட்டையன் சாஸ்தா கோயிலிலும் பங்குனி உத்திர விழா சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

நாங்குநேரி:  நாங்குநேரி அருகே சிங்குளம் கால்புரவு வயல் வெளியில் உள்ள ஆரியங்காவு சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா நடந்தது. விழாவில் சிறப்பு யாகம் மற்றும் கும்ப பூஜை நடத்தப்பட்டது. அதன் பின் சாஸ்தாவுக்கும் பூர்ணா புஷ்கலை தேவியருக்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.  கோவில் முன் பொங்கலிட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதுபோல நாங்குநேரி பெரிய குளக்கரையில் உள்ள செம்புக்குட்டி சாஸ்தா கோவில், செங்கமலமுடையார் சாஸ்தா, உள்ளிட்ட பல்வேறு கிராம சாஸ்தா கோவில்களிலும் பங்குனி உத்திரம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால் பெரும்பாலான சாஸ்தா கோவிலில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடையம்: ஆழ்வார்குறிச்சி ராமநதி ஆற்றின் தென்புறம் பிரசித்தி பெற்ற 141 கிராம சேனைத்தலைவர் சமுதாய வரிதாரர்களுக்கு பாத்தியபட்ட காக்கும் பெருமாள் சாஸ்தா,  சுடலை மாடசாமி உள்ளது. இந்த கோயிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு காலை, மதியம் அபிஷேகம் தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் வளர்ச்சி நல கமிட்டியினர் செய்திருந்தனர். ஏப்.14ம் தேதி இங்கு கொடை விழா நடக்கிறது.

Tags : festival ,Maram Uthiram ,temples ,Sastha ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!