×

புலிவலம் ஊராட்சி சாலையோரத்தில் கொட்டப்படும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு

திருவாரூர், மார்ச் 22:  திருவாரூர் அருகே புலிவலத்தில் ஊராட்சி மூலம் சாலையோரங்களில் கொட்டப்படும் கழிவுநீர், குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இங்குள்ள தெற்கு தெரு மற்றும் மாரியம்மன் கோயில் தெரு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்து வருகின்றன.

மெயின் ரோட்டில் இருந்து இந்த தெற்கு தெரு மற்றும் மாரியம்மன் கோயில் தெருவிற்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் ஊராட்சி முழுவதுமிருந்து அள்ளப்படும் ஓட்டல் கழிவுகள், கோழிக்கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுநீர் அனைத்தும் ஊராட்சி நிர்வாகம் மூலமே இந்த பகுதியில் கொண்டு வந்து கொட்டப்படுவதால் இங்கு துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இது போன்ற கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க கோரி நேற்று இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் ஒன்று சேர்ந்து கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாமகேஸ்வரியிடம் மனு அளித்துள்ளனர்.

Tags : collector ,spread ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...