கடலில் விழுந்து மாயமான மீனவரின் உடல் கரை ஒதுங்கியது

சேதுபாவாசத்திரம், மார்ச் 22: சேதுபாவாசத்திரம் அருகே மீன் பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்த மீனவரின் உடல் கரை ஒதுங்கியது.  
சேதுபாவாசத்திரம் கரையூர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவருக்கு சொந்தமான பைபர் கிளாஸ் படகில் கடந்த 18ம் தேதி மாலை அவருடன் முஸ்லிம் தெருவை சேர்ந்த பஷீர்முகமது மகன் ஷேக்முகமது (20), சர்புதீன் மகன் காஜாமுகைதீன் (25) ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 3 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் போடப்பட்டிருந்த மீன்பிடி வலையை ஷேக்முகமது எடுத்தார். அப்போது அவர் நிலைதடுமாறி தலைகுப்புற கடலில் விழுந்து மாயமானார்.

கடந்த 19ம் தேதி கரை திரும்பிய மீனவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறையினர் வழக்குப்பதிந்து மீனவர்களின் உதவியோடு படகு மூலம் காணாமல்போன ஷேக்முகமதுவை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது உடல் நேற்று முன்தினம் மாலை சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள புதுப்பட்டிணம் அருகே கரை ஒதுங்கியது. கடலோர காவல்துறையினர் விரைந்து சென்று ஷேக்முகமதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : sea ,fisherman ,fringe ,
× RELATED கடலில் மூழ்கி மீனவர் சாவு