×

சாலைகளில் சிறுதானியங்களை பிரித்தெடுக்கும் விவசாயிகளால் நூறாண்டுகால புளியமரங்களுக்கு பேராபத்து கண்டுகொள்ளுமா நெடுஞ்சாலைத்துறை?

பெரம்பலூர், மார்ச் 22: பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூரிலிருந்து திட்டக்குடி வரை தேசியநெடுஞ் சாலை என்.ஹெச்.45ம், பெரம்பலூரிலிருந்து அரியலூருக்கும், துறையூருக்கும், ஆத்தூருக்கும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன. இவைதவிர கிராமப்புறங்களில் செல்லும் ஊரக சாலைகள் உள்ளன. இவற்றில் தேசிய நெடுஞ்சாலைதவிர இதர சாலைகளில் அந்தந்தப் பகுதி வயல்களில் விதைத்து அறுவடைசெய்த சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சிறுசோளம் மற்றும் துவரை, கொண்டக்கடலை ஆகியப் பயிர்கள், சிறுதானியங்களை பிரித்தெடுப்பதற்காக சாலைகளில் பரப்பிவைத்துக் காயவைக்கின்றனர். இவை குறிப்பிட்ட வெப்பத்தில் காய்வதாலும், சிறுசிறு வாகனங்கள் அவற்றில் பயணிப்பதால் மிளார்களில் இருந்து அவை உதிர்வதால் பணம் செலவின்றி எளிதில் பிரித்தெடுத்து விற்பனைக்காகவோ, உணவுக்காகவோ பயன்படுத்த முடியும். இதற்காக பெரம்பலூர் செட்டிக்குளம்சாலை, கிருஷ்ணாபுரம் கைகளத்தூர்சாலை, வேப்பந்தட்டை அனுக்கூர் சாலை, வி.களத்தூர் கை.களத்தூர் சாலை, திருமாந்துறை அகரம்சீகூர் சாலை, மருதையான்கோயில் திட்டக்குடி சாலை, ஆலத்தூர்கேட் கொளக்காநத்தம் சாலை, ஆலத்தூர்கேட் செட்டிக்குளம் சாலை, அருமடல் கீழப்புலியூர் சாலை, குன்னம் வேப்பூர் சாலை, குன்னம் கொளக்காநத்தம் சாலை, வேப்பூர் வயலப்பாடி சாலை போன்ற கிராமப்புற இணைப்புச் சாலைகளில் சிறுவிவசாயிகள் சிறுதானியக் கதிர்க ளைக் காயவைக்கின்றனர்.

இவ்வாறு காயவைத்து, அடித்து சிறுதானியங்களைப் பிரித்தெடுத்தப்பிறகு மிளார் கள், சக்கைகளை சாலையோரம் போட்டுச் செல்கின்றனர். இதனை சிலர் தீ வைத்து கொளுத்தி விடுவதால் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவுகிறது. மேலும் ரோட்டோரம் உள்ள புளியமரங்களும் தீயினால் பாதிக்கப்படுகிறது. தீயின் ஜூவாலைகள் பற்றியவுடன் நடுமரத்தில் ஊடுருவி ஒட்டுமொத்த மரத்தையே அழித்து விடுகிறது. நூறாண்டுகளை கடந்த புளியமரங்கள் தீக்குளிக்கும் மனிதரைப்போல் உயிரோடு எரிவது காண்போரை மனம் கரைய வைக்கிறது. புவி வெப்பமயமாததால் ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கத்தால் பருவம் தப்பிப் போய் மழையே இல்லாமல் மரம்செடிகள் காய்ந்துகருகிவரும் நிலையில், மழைக்காக மரங்களை நடுங்களென வலியுறுத்திவரும் சூழலில் இப்படி புளியமரங்கள் முழுமை யாகப் பற்றி எரிவதை நெடுஞ்சாலைத்துறை பார்த்துக் கொண்டிருப்பது வேதனையை அளிக்கிறது. சிலஇடங்களில் சாலைப்பணியாளர்கள் எச்சரித்தாலும் சிறுதானிய விவசாயிகள் மிளார்களுக்குத் தீவைப்பது புவியைக் காத்துவரும் புளியமரங்களுக்கு பேராபத்தையே ஏற்படுத்திவருகிறது.

Tags : road ,hundreds ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...