×

அரசு பள்ளிக்களுக்கு கல்விச்சீர் திருவிழா

திருப்போரூர், மார்ச் 22: திருப்போரூரில் 126 ஆண்டுகளாக செயல்பட்டு  வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 126ம் ஆண்டு விழா மற்றும்  கல்விச்சீர் திருவிழா நடந்தது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்  சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை மேரிஸ்டெல்லா  வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி ஆசிரியர்கள் உஷாராணி,  வாசுகி, லிவினா எழிலரசி, சோபியாஜெபசீலி, தாசன் ராபின்சன் காந்தி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், வட்டார வள  மேற்பார்வையாளர் திருவருள்செல்வி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் சிவராமன்,  மேலாண்மைக் குழுத்தலைவர் ஆண்டாள், ஆலத்தூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர்  ஜோசப் உள்பட பலர் கலந்துக் கொண்டு பரிசுகள் வழங்கினர். முன்னதாக பள்ளியின் பெற்றோர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் ₹1  லட்சம் மதிப்புள்ள பீரோ, தண்ணீர் தொட்டி, லேப்டாப், எழுது பொருட்கள்  உள்ளிட்டவை பள்ளிக்கு கல்விச் சீராக வழங்கப்பட்டன. முடிவில் உதவி  தலைமையாசிரியை தனபாக்கியம் நன்றி கூறினார்.

திருப்போரூர் ஒன்றியம் மேட்டுத்தண்டலம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நேற்று  நடந்தது. தலைமை ஆசிரியை மோனிகா சித்ரா தலைமை தாங்கினார். பள்ளி  மேலாண்மைக் குழுத் தலைவர் ஈஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் ஜூலியட், வட்டார வள  மேற்பார்வையாளர் திருவருள்செல்வி ஆகியோர் கல்விச்சீர் ஊர்வலத்தை தொடங்கி  வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ₹80 ஆயிரம் மதிப்பிலான எழுது  பொருட்கள், பீரோ, நாற்காலிகள், கணினிகள் பள்ளிக்கு சீர் வரிசையாக  வழங்கப்பட்டன. தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Tags : Educational Festival ,Government Schools ,
× RELATED தையூர், இரும்பேடு அரசு பள்ளிகள் சென்டம்