×

தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கே கண்காணிப்பு

திருவள்ளூர், மார்ச் 22: தேர்தல் பணியில் அசட்டையாகவும், பணியில் நாட்டமில்லாமலும், குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை கண்காணித்து, அவர்கள் செய்யும் தவறுகளை உறுதி செய்து அதன் பின் நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 10 முதல் அமலுக்கு வந்துவிட்டது. மறுதினமே தேர்தல் அதிகாரிகளுக்கான சிறப்புக்கூட்டம் கலெக்டர்  மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர், போலீஸ் எஸ்.பி. ஆகியோர் முன்னிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்விதம், அதில் வரும் நெருக்கடிகள் என்ன, எப்படி சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து, பறக்கும்படை, புள்ளியியல் கண்காணிப்பு, வீடியோ கண்காணிப்பு உள்ளிட்ட 30 குழுக்களை ஏற்படுத்தி, அவர்கள் அந்தந்த சட்டமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் திட்டப்பணிகள், ஆன்லைன் கண்காணிப்பு, செலவின கண்காணிப்பு, தேர்தல் நடத்தை விதிமுறை கண்காணிப்பு, தகவல் தொடர்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பராமரிப்பு, வாக்குச்சீட்டு பொருத்துதல் உட்பட பல குழுக்கள் பிரிக்கப்பட்டு, அதற்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களின் கட்டுப்பாட்டில், தேர்தல் பணிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியினர் பொது இடங்களில் விளம்பரம் செய்யக்கூடாது. குறிப்பிட்ட சில இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் நடத்த முன்னதாக அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், கட்சிக்கொடி, தோரணங்கள், பந்தல், மைக்செட், பர்னிச்சர் குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் அனுமதி பெறாமல் பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்கள் தேர்தல் பிரிவுக்கு வந்துள்ளன. தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணியில், காலதாமதமாகவோ அல்லது பணி மேற்கொள்வதை தவிர்த்தோ, அல்லது தட்டிக்கழித்தோ செயல்பட்டால் அவர்கள் கண்காணிக்கப்பட்டு, அதற்கான ஆதாரங்களை சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்
துள்ளது.


நேர்மை மிக முக்கியம்
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், ‘’தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சாதாரண பணியாளர் முதல் மேல்மட்டத்திலுள்ள அதிகாரி வரை, நேர்மையாகவும், கடமை தவறாமலும் பணிமேற்கொள்ள வேண்டும். தனிமனிதருக்கோ, கட்சிகளுக்கோ, கட்சி நிர்வாகிகளுக்கோ ஆதரவாக செயல்படக்கூடாது. அரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறும்போது அதை மறைக்க முயற்சிக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் நேர்மை மிக முக்கியம். இது வரை எந்த ஒரு அதிகாரி மீதோ, பணியாளர் மீதோ புகார் ஏதும் வரவில்லை’’ என்றார்.

Tags : election observers ,
× RELATED நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை...