×

குடும்பத்துடன் மெக்கானிக் தற்கொலை முயற்சி எதிரொலி கலெக்டர் அலுவலகத்தில் தடுப்பு அமைத்து பாதுகாப்பு அதிகரிப்பு

கரூர், மார்ச் 22 கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கூடுதல் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மனு தாக்கல் முடியும் வரை தினமும் 50 போலீசார் டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்பையும் மீறி கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட மெக்கானிக் ஒருவர் குடும்பத்தினருடன் மண்எண்ணெய் கேனுடன் வந்து கலெக்டர் அலுவலக வாயிலில் மண்எண்ணையை குடும்பத்தினர் அனைவர் மீதும் ஊற்றி தீவைக்க முயன்றார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக சாலை தடுப்புகள் அதிகமாக அமைக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் செல்வதற்கு மட்டும் வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதிகாரிகள், வேட்பாளர்கள் வாகனங்கள் இந்த வழியாக சென்று விட்டு அதே வழியாகத்தான் திரும்பி வர வேண்டும் என்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரது பேக்கும் சோதனையிடப்பட்டு எந்த அலுவலகத்திற்கு என்ன காரணத்திற்காக செல்கிறார்கள் என விசாரித்த பின்னரே போலீசார் உள்ளே அனுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : echo collector ,
× RELATED தொடரும் தற்கொலை முயற்சிகள் எதிரொலி...