சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்

சோளிங்கர், மார்ச் 22: சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் நேற்று பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மகாலட்சுமியின் அவதார நட்சத்திரம் பங்குனி உத்திரம் என்பதால் பங்குனி மாத உத்திர திருநாளில் வைணவ கோயில்களில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.

இதையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு உற்சவர் தேவி, பூதேவி, சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு மாடவீதிகள் வழியாக பெரிய மலை திருக்கோயிலில் எழுந்தருளினார்.பின்னர், மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு பெரிய அலங்கார திருமஞ்சனமும், மாலை 4 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வந்து காசி யாத்திரை, மாலை மாற்றுதல் நிகழ்வு நடந்தது. மேலும், 6 மணிக்கு உற்சவர் பக்தோசித பெருமாளுக்கும் அமிர்தவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

× RELATED அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக...