×

திருவண்ணாமலை, ஆரணி தொகுதியில் நேற்றும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை சுயேட்சைகளிடம் ஆர்வம் குறைந்தது

திருவண்ணாமலை, மார்ச் 22: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் நேற்றும் வேட்புமனுதாக்கல் செய்ய யாரும் வரவில்ைல. இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களிடம் போட்டியிடும் ஆர்வம் குறைந்திருக்கிறது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, கடந்த 19ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடக்கிறது. மனுதாக்கல் செய்ய வரும் 26ம் தேதி கடைசி நாளாகும். நாளையும், நாளை மறுதினமும் அரசு விடுமுறை நாட்கள். எனவே, வேட்புமனுதாக்கல் செய்ய வரும் 25 மற்றும் 26ம் தேதிகள் என இன்னும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. ஆனாலும், இதுவரை இரண்டு தொகுதிகளிலும் வேட்புமனுதாக்கல் சூடுபிடிக்கவில்லை.

மனுதாக்கல் தொடங்கி 3 நாட்கள் கடந்த நிலையில், முதல் நாளன்று திருவண்ணாமலை தொகுதியில் ஒருவர் மட்டும் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, நேற்று முன்தினமும், நேற்றும் ஒருவர்கூட மனுதாக்கல் செய்யவில்லை. வேட்புமனுக்களை பெறுவதற்காக, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி(திருவண்ணாமலை தொகுதி), டிஆர்ஓ ரத்தினசாமி (ஆரணி தொகுதி) மற்றும் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களான திருவண்ணாமலை ஆர்டிஓ தேவி, ஆரணி ஆர்டிஓ மைதிலி ஆகியோர் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தங்களுடைய அலுவலங்களில் காத்திருந்தனர்.

இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களிடம் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் இந்த தேர்தலில் வெகுவாக குறைந்திருக்கிறது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை தொகுதியில் 16 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதேபோல், ஆரணி தொகுதியில் 13 சுயேட்சைகள் உள்பட 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த மக்களவைத் தேர்தலைவிட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுதாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதால், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags : constituency ,Thiruvannamalai ,Aarani ,Independents ,
× RELATED டெல்டாவிற்கு அடுத்து விவசாய பூமியாக...