×

திருட்டு, வழிப்பறி, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி, மார்ச் 21:  திருச்சி மாநகரில் வழிப்பறி திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திருச்சி கிராப்பட்டியில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் காந்திநகரை சேர்ந்த ஷியாம்குமார் (36) என்பவர் கடந்த 30.1.2019 அன்று கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த போது ராம்ஜிநகரை சேர்ந்த தீனுஆனந்த் என்பவரி கத்தியை காட்டி மிரட்டி ரூ.700ஐ பறித்துச் சென்றார். இதுகுறித்து ஷியாம்குமார் எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தீனு ஆனந்தை கைது செய்தனர். இவர்மீது ஏற்கனவே வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் எ.புதூர் காவல்நிலையத்தில் 3 வழக்குகளிலும், கே.கே.நகர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளிலும் மற்றும் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் 1 வழக்கும் என மொத்தம் 8 வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
எனவே, தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எ.புதூர் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மேற்படி தீன்ஆனந்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டதன்பேரில் அதற்கான ஆணையை எ.புதூர் இன்ஸ்பெக்டர் திருச்சி மத்திய சிறையில் உள்ள தீன்ஆனந்திடம் வழங்கினார்.

திருச்சி காந்தி மார்க்கெட் நெல்பேட்டை ஒயின்ஷாப்பில் கடந்த 28.6.2018 அன்று பணியிலிருந்த திருச்சி வடக்கு தாராநல்லூரை சேர்ந்த ரத்தினம் மகன் ரெங்கராஜ் என்பவரிடம் திருச்சி எடத்தெருவை சேர்ந்த ஜாக்கி (எ) ஜாக்கிசான், பணம் கேட்டு மறுக்கவே, கத்தியை காட்டி அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ.750ஐ பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஏற்கனவே தில்லைநகர் காவல்நிலையத்தில் ஜாக்கிசான் மீது வழக்கு உள்ளதால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை நீதிமன்ற காவலில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையிலடைத்தனர். இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி, கொலை மிரட்டல், கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, திருட்டு மற்றும் அடிதடி குற்றங்கள் என காந்தி மார்க்கெட் போலீசில் 6 வழக்குகள் உள்பட  பல்வேறு காவல்நிலையங்களில் 9 வழக்குகள் உள்ளது. எனவே காந்திமார்க்கெட் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். அதற்கான ஆணையை இன்ஸ்பெக்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாக்கிசானிடம் வழங்கினார். திருச்சி காஜாபேட்டையை சேர்ந்த சங்கலிகருப்பு (34) என்பவர், தனது தம்பி அய்யப்பன் (24) என்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக ஜனவரி 3ம்தேதி இரவு பாலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணைக்கு பின் சந்து என்ற சந்திரசேகர் என்பர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரசேகர் மீது கொலை உள்ளிட்ட 3 வழக்கு இருந்ததால் சந்திரசேகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Tags : robbery ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...