×

பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோயில் தேர்திருவிழா துவங்கியது திரளான பக்தர்கள் பங்கேற்பு

தொட்டியம், மார்ச் 21: தொட்டியம் மதுரைகாளியம்மன் கோயில் பங்குனி தேர்திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் வருகிற ஏப்ரல் 2ம்தேதி நடக்கிறது. திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் பிரசித்திபெற்ற மதுரைகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனித் தேர்த்திருவிழா ஒரு வாரம் நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி தேர்திருவிழா கடந்த 12ம்தேதி முதல் தட்டு சாற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் இரவு இரண்டாவது தட்டு சாற்றும் நிகழ்ச்சியும், பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து ஒருவாரம் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் அம்மன் திருவீதியுலாவும், பூத்தட்டு கொண்டு வருதலும் நடைபெறும்.

திரளான பக்தர்கள் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பூத்தட்டு எடுத்து வந்து மதுரை காளியம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தினர். வருகிற 26ம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியும், அடுத்தநாள் 27ம்தேதி அடைத்த கோவிலுக்கு ஆயிரம்பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.  முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் ஏப்ரல் 2ம்தேதி நள்ளிரவு கோயில் வளாகத்தில் சின்னதேர், பெரியதேர் தலையலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஒரு வாரம் பக்தர்கள் இரண்டு தேர்களையும் தோளில் சுமந்து செல்வார்கள். அப்போது எல்லை உடைக்கும் நிகழ்ச்சி, வாணவேடிக்கை, கிடாவெட்டு, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், 16ம்தேதி உதிர்வாய் துடைக்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் போத்திச்செல்வி, தக்கார் ராணி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Bhagavathy ,celebration ,
× RELATED குளித்தலை அருகே வீரவள்ளி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்