×

அறந்தாங்கி பகுதியில் கோடை துவங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் வீட்டிலேயே பொதுமக்கள் முடங்கினர்

அறந்தாங்கி, மார்ச் 21: அறந்தாங்கி பகுதியில் கோடை துவங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் வெப்பத்தை  தாங்க முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். அறந்தாங்கி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளன. கடந்த ஆண்டு வழக்கத்தைவிட குறைவாக பெய்த மழையை பயன்படுத்தியும், காவிரியில் வந்த தண்ணீரை பயன்படுத்தியும் நெல் சாகுபடி செய்தனர். இதில் மானாவாரி  பகுதிகளில் முழுவதும், காவிரிப்பாசன  பகுதிகளில் 25 சதவீதமும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும் காவிரிப்பாசன பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், ஏரிகளில் மீதமிருந்த தண்ணீரை பம்புசெட் மூலம் இறைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அறந்தாங்கி பகுதியில் சில குறிப்பிட்ட ஊர்களை தவிர மற்ற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கால்நடைகள் குடிக்கக்கூட  தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.  நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால், கோடைகாலம் தொடங்க உள்ள  நிலையில் தற்போது சுட்டெரிக்கும் வகையில் கோடை துவங்கும் முன்பே மே மாத வெயில்போல் அடிக்க தொடங்கியதால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தகிக்கும் வெயிலில் எங்கும் செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கிராமங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கியுள்ள நிலையில் கோவில்களுக்கு செல்லக்கூட முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது. திருவிழா சமயங்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் நிழலுக்காக மரங்களின் கீழே தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கி உள்ளதால், அங்கு கூடும் பக்தர்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அறந்தாங்கி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழை பெய்யாததால், நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. மேலும் கஜா புயலால் மரங்கள் அடியோடி சாய்ந்து போய்விட்டன. நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாததாலும், மரங்கள் இல்லாததாலும், கோடை காலம் தொடங்கும் முன்னரே அடிக்கத் தொடங்கிய வெயிலால், அதிகம் வெப்பநிலையை உணர முடிகிறது.

தற்போது கிராமங்களில் உள்ள கோவில்களில் திருவிழா தொடங்கி உள்ளதால், மக்கள் கோவில்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் கோவிலில் இருக்கும்போது ஏற்படும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மரங்களை தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிக பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொட்டகை மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். மரங்களை அழித்ததால், மழையை இழந்த இப்பகுதி மக்கள் சமீபத்தில் இருந்த மரங்களையும் கஜா புயலுக்கு காவு கொடுத்து விட்டனர். மரங்கள் இல்லாததாலும், நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததாலும், தற்போது அடிக்கும் வெயிலால் அதிகப்படியான  வெப்பநிலையை  உணர முடிகிறது. திருவிழாக்களுக்கு செல்லும் பக்தர்கள் சிரமப்படாமல் சாமி தரிசனம் செய்ய, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் கோவிலிகளில் கொட்டகை அமைத்து கொடுப்பதோடு, குடிநீர் வசதியும் செய்துகொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags : area ,public ,Aranthangi ,house ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...