×

அறந்தாங்கி நகரில் விதியை மீறி வருவாய்த்துறையின் பிளக்ஸ் பேனர் வாகன ஓட்டிகள் அதிருப்தி

அறந்தாங்கி, மார்ச் 21: அறந்தாங்கியில் விதிகளை மீறி பெரிய அளவிலும், வழிகாட்டு பலகைகளை மறைத்தும் தேர்தல் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்களை வருவாய்த்துறையினர் வைத்துள்ளது பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தேர்தல்களில் நூறு சதவீத வாக்களிப்பை எட்டும் நோக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தேர்தல் விழிப்புணர்விற்காக பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்து வருகிறது. தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால், வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்து வருகிறது.இதேப்போல அடுத்த மாதம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, அதன்மூலம் நூறு சதவீத வாக்குப்பதிவை எட்டுவதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் துண்டுபிரசுரம் வெளியிடுவது, மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் பிளக்ஸ் பேனர் வைப்பது, தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்துவது, தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துவது என பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன்படி அறந்தாங்கி நகரில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்கள் வருவாய்;த்துறை மூலம் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. கட்டுமாவடி முக்கத்தில் உள்ள வழிகாட்டு பலகையை மறைத்தவாறு, விதிகளை மீறி பெரிய அளவில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு பலகை, பிளக்ஸ் பேனரால் மறைக்கப்பட்டுள்ளதால், பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து காரைக்குடிக்கோ, கட்டுமாவடிக்கோல் செல்ல வேண்டியவர்கள், தாங்கள் செல்லவேண்டிய பகுதிக்கு செல்ல முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேப்போல அறந்தாங்கி நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக பல்வேறு இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்கள் உயர்நீதி மன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுதும் அரசியல் கட்சிகளால் பெரியஅளவில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால், போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் நேர்வதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தார். அதன்படி நகரப்பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கான விதிகளை உயர்நீதிமன்றம் வகுத்தது. அதன்படி நகரப்பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், 10 அடிக்கு 10 அடி என்ற அளவில்தான் பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் பிளக்ஸ் பேனர்கள் வைக்க சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டுமே பேனர்கள் வைக்க உத்தரவிட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாயை தேடித்தரும் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கான அனுமதி குறித்து, எந்த நகராட்சியும் கண்டுகொள்வதில்லை. இதற்கு காரணம் அதிக அளவில் ஆளும்கட்சியினர் பேனர்களை வைப்பதால்தான்.

அறந்தாங்கி நகரில் ஆளும்கட்சியினர் நகராட்சி அனுமதி பெறாமல் வைக்கும் பிளக்ஸ் பேனர்களால், போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் தொடர்ந்து நடந்து வந்தபோதிலும் நகராட்சி நிர்வாகம் பிளக்ஸ் பேனர்கள் குறித்து கண்டு கொள்வதில்லை. தற்போது வருவாய்த்துறை சார்பில் அறந்தாங்கி நகரில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள், நகராட்சி அனுமதி பெறாமலும், உயர்நீதி மன்ற விதிகளை மீறி பெரிய அளவிலும், கட்டுமாவடி முக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிகாட்டு பலகைளை மறைத்தும் வைக்கப்பட்டுள்ளன. வழிகாட்டு பலகை மறைக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வழி தெரியாமல் தடுமாறி வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறைக்கு புகார் கூறியும் அவர்கள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்கவில்லை. தனியாருக்கு ஒரு சட்டம், அரசு துறைக்கு ஒரு சட்டமா என நினைக்கும் அளவிற்கு விதிகள மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இது கிராமத்தில் கூறப்படுவதைப்போல மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டியாக என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார். சட்டத்தையும், விதிகளையும் மதித்து மக்களுக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டிய வருவாய்த்துறையே பிளக்ஸ் பேனர்களை விதிகளை மீறி வைத்துள்ளது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.உடனே விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றி, விதிகளுக்கு உட்பட்டு பேனர்களை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Disaster ,banner motorists ,town ,Aranthangi ,
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...