×

நீர்வரத்து பகுதிகளில் மண் திருடப்படுவதால் வறண்டு கிடக்கும் புழல், சோழவரம் ஏரிகள்

புழல், மார்ச் 21: சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம் ஏரிகளின் நீர் வரத்து பகுதிகளில் அனுமதியின்றி மண் எடுப்பதால், மழைக்காலங்களில் நீர் வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி ஆகும். நேற்றைய நிலவரப்படி ஏரியில் நீர் இருப்பு 385 மில்லியன் கனஅடியாக இருந்தது. இதில் இருந்து சென்னை மாநகர மக்களுக்கு வினாடிக்கு 90 கன அடி வீதம் நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் பருவமழை இல்லாததாலும், பூண்டி ஏரியில் இருந்தும் தண்ணீர் வராததாலும் தற்போது புழல் ஏரி பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு குட்டைபோல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக ஏரியின் நீர்மட்டம் அளவு எடுக்கும் இடத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வற்றி காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் வருகிற மே மாதத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகும். அதனால் சென்னை மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை ஏற்படும்.

இதேபோல் இன்னொரு ஏரியான சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. அதன் நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 47 கனஅடி மட்டும் இருந்தது. இந்த ஏரியும் தற்போது வறண்டு உள்ளது. இதனால் இந்த ஏரியில் இருந்தும் சென்னைக்கு குடிநீர் வழங்க முடியாத நிலையே உள்ளது. இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘புழல் ஏரியின் ஒரு பகுதியான செங்குன்றம் ஆலமரப்பகுதி, இந்திரா நகர் பகுதி, பம்மதுகுளம், பொத்தூர், உள்ளிட்ட ஏரியை சுற்றியுள்ள பல இடங்களில் லாரிகள் மூலம் மண் எடுக்கப்பட்டதால் சுமார் 20 அடிக்கு மேல் ஆழம் உள்ளது. இதேபோல் சோழவரம் ஏரியில் மண் எடுக்கப்பட்டதால் அங்கேயும் சுமார் 20 அடி ஆழம் உள்ளதாலும் மழைக்காலங்களில் வர வேண்டிய தண்ணீர் 2 ஏரிகளுக்கும் வராமல் ஏரியின் மேல் மேற்பகுதியில் ஆழமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் உள்ளது. எனவே வருங்காலங்களில் இந்த 2 ஏரிகளிலும் அரசு மண் எடுக்க அனுமதி வழங்காமல் இருக்க வேண்டும்.மேலும் ஏரியை சுற்றி கரை இல்லாத பகுதிகளில் கரை அமைத்து நடவடிக்கை எடுத்தால் திருட்டுத்தனமாக மண் எடுப்பதை தடுக்கலாம். அப்படி தடுத்தால் மழைக்காலங்களில் ஏரிகளுக்கு குறைந்த நாட்களிலேயே தண்ணீர் நிரம்பிவிடும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதை செய்ய அரசு முன் வர வேண்டும்’’ என்றார்.

அதிகாரிகளுக்கு மிரட்டல்

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளை மிரட்டி, இங்குள்ள ஏரிகளில் மண் எடுக்கின்றனர். 3 அடி என அனுமதி வாங்கிவிட்டு 20 அடி ஆழத்துக்கு மண் எடுப்பதால் தான் ஏரிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. இதை எதிர்த்து கேட்கும் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளையும் மிரட்டுகின்றனர். இனி வருங்காலங்களில் ஏரிகளில் மண் எடுப்பதற்கு நிரந்தர தடை விதிக்க சம்பந்தப்பட்ட தமிழக அரசு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

கடந்த ஆண்டு நீர் இருப்பு

புழல் ஏரியின் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி 1426 மில்லியன் கன அடியாக இருந்தது. அதேபோல், சோழவரம் ஏரியில் இதே தேதியில், 276 மில்லியன் கன அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : lakes ,lake ,lagoon ,watershed ,
× RELATED ஏரியில் மூழ்கி மாணவன் சாவு