×

சைதையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்

சென்னை, மார்ச் 21: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று காலை மேற்கு சைதாப்பேட்டை, பஜார் சாலையில் நடந்தது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ், தாயகம் கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பணிமனையை முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, தென்சென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

முன்னதாக அவர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் நான் 25 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். முதற்கட்டமாக சைதாப்பேட்டையில் எனது தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளேன். கேடுகெட்ட மோடி ஆட்சியையும், மானங்கெட்ட பழனிசாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பும் வகையில் வாக்காளர்கள் திமுக வேட்பாளராகிய தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்களிக்க வேண்டும். அவரை இத்தொகுதி உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப உங்கள் ஆதரவை அளிக்க வேண்டும்’’ என்றார்.
பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். இங்கு வாரிசு அரசியல் என்ற முறையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர்கள் ஆற்றிய பணி, கலந்துகொண்ட போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். சவுக்கிதார் என பாஜவினர் அடைமொழி வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. அதன்படி நடந்து கொள்ள வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக உள்ளது என தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் அறிக்கை நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் எம்எஸ்கே.இப்ராகிம், குணசேகரன், வழக்கறிஞர் தர், கே.கே.நகர் தனசேகரன், சைதை மகேஷ்குமார், எம்.கே.ஏழுமலை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகர ராஜா, துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், சந்திரன், குணாளன் மற்றும் பாலவாக்கம் சோமு, கீதா ஆனந்தன், கிரிஜா பெருமாள், காங்கிரஸ் சுசீலா கோபாலகிருஷ்ணன், சிபிஎம் பாக்கியம், இந்திய கம்யூனிஸ்ட் ஏழுமலை, விசிக ரவிசங்கர், வி.கே.ஆதவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்தபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி