×

பட்டா வழங்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு

சூளகிரி, மார்ச் 21: சூளகிரி அருகே, வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். சூளகிரி தாலுகா  பெத்த சிகரலப்பள்ளி ஊராட்சியில் உள்ள  கொட்டாயூர், துறிஞ்சிபட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு, இதுவரை  வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம், பல ஆண்டுகளாக மனு கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, பட்டா வழங்காத அதிகாரிகளை கண்டித்து, கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை சூளகிரி தாசில்தார் சேகர், ஆர்ஐ வசந்தி மற்றும் விஏஓ சங்கர் ஆகியோர் கிராமத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சமாதான  பேச்சுவார்த்தை நடத்தினர்.  அவர் கூறுகையில், வீட்டுமனை பட்டா கேட்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது. எனவே, வேறு இடத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் இடம் வழங்க, மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்தார். ஆனால், இதை மக்கள் ஏற்க மறுத்து விட்டனர். மேலும், 80 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கிராமத்தை விட்டு வெளியேற மாட்டோம் எனவும், பட்டா வழங்கப்படவில்லை எனில் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தனர்.


Tags : election ,PTA ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...