×

பங்குனி உத்திர தேர் திருவிழா

திட்டக்குடி, மார்ச் 21: திட்டக்குடியில் மிகவும் பழமைவாய்ந்த அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா நடந்து வருகிறது. கடந்த 8 நாட்களாக தினமும் அம்மன், சிவன் உட்பட அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனை நடந்து வந்தது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் மலர் அலங்காரங்களுடன் விருட்சவாகனம், பூதவாகனம், கைலாய யானை வாகனங்களில் சுவாமி திருவுலா நடந்தது. தொடர்ந்து 9வது நாளான நேற்று சிவனுக்கும், அம்மனுக்கும் பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து தேரடிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு விநாயகர் தனித்தேரிலும், அசனாம்பிகை, வைத்தியநாத சுவாமிகள் தனித்தேரிலும், அம்மன் தனித்தேரிலும் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

பக்தர்கள் தேங்காய்களை உடைத்து பிரார்த்தனை, நேர்த்திக்கடன் செய்தனர். தொடர்ந்து வெடி, மேளதாளங்களுடன் தேர் திருவுலா நடந்தது. பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேர்களை வடங்களை பிடித்து இழுத்து சென்றனர். மூன்று தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு தேரோடும் வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்கார் பழனியம்மாள், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். தேர் திருவிழாவில் பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரியா முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலூர்: கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள புகழ்பெற்ற சிவசுப்ரமணியர் திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியன் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வலம் வந்தார். பக்தர்களும் பொதுமக்களும் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது முருகனுக்கு  அரோகரா என பக்தி முழக்கம் எழுப்பினர்.முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் நடந்தது. கடலூரில் பல்வேறு பகுதிகளிலிருந்து  வந்திருந்த பகதர்கள் வழிநெடுகிலும் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தேர் நிலையை அடைந்ததும் தீபாராதனை காட்டப்பட்டு  பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து சுவாமிக்கு இரவு மகா அபிஷேகம் நடந்தது. இன்று (21ம் தேதி) காலை 6 மணிக்கு உத்தரபாத கோபுர தரிசனம், அதை தொடர்ந்து 108 சங்காபிஷேகம், பகல் 12 மணிக்கு கலசபூஜை அபிஷேகம், இரவு கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

 சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே பாண்டியநாயகர் கோயில் உள்ளது. இங்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் பங்குனி உத்திர விழா 10 நாட்கள் சிறப்பாக நடப்பது வழக்கம். இங்கு பங்குனி உத்திர விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சாமி வீதியுலா சென்றது.9 நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. காலை 7 மணிக்கு மேல் கோயிலில் இருந்து முருகப்பெருமான் மேள, தாளம் முழங்க தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கீழவீதியில் இருந்து புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மீண்டும் கீழவீதியை அடைந்தது. தேரோட்டத்திற்கான சிறப்பான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

Tags : Maa Uthiraka Chari Festival ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்