×

கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற டூவீலர் மெக்கானிக் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கரூர், மார்ச் 21:   கந்துவட்டிக்கொடுமை காரணமாக குடும்பத்துடன் கரூர் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற டூவீலர் மெக்கானிக்கால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ்(40). தற்போது  கரூர் மாவட்டம், பெரியவடுகபட்டி பகுதியில் வசிக்கிறார். டூவீலர்  மெக்கானிக் வேலை செய்து வரும் இவர் குடும்ப செலவுக்காக ரூ.45 ஆயிரம் கந்துவட்டிக்கு  வாங்கினார். பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. பணம் கொடுத்தவர்கள்  போனிலும், நேரிலும் வந்து மிரட்டல் விடுத்ததால் மனம் வெறுத்த அந்தோணிராஜ்  நேற்று தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தார்.  கையில் மண்ணெண்ணெய் கேன் ஒன்றை வைத்திருந்தார். கலெக்டர் கார் நிற்கும் இடம்  அருகே வந்ததும் கேனில் இருந்த மண்ணெண்ணைைய தன் மீது ஊற்றிக்கொண்டு மனைவி  குழந்தைகள் மீதும் ஊற்றினார். தீவைக்க முயன்றபோது அவர் சத்தம் போட்டதை கேட்ட  போலீசார் விரைந்து வந்து தடுத்தனர். அனைவர் மீதும் தண்ணீரை ஊற்றினர்.  பின்னர் விசாரணக்காக தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து  சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பலத்த காவலையும் மீறி நடந்த சம்பவம்:  கரூர் கலெக்டர்  அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள். உள்ளூர் போலீசார், ஆயுதப்படை போலீசார் என  60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிரந்தரமாக  அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், முன்பும்  போலீசார் நிறுத்தப்பட்டு அனைவரையும் எங்கு செல்கிறார்கள் என கேட்ட பின்பே  அனுப்புகின்றனர். கலெக்டர் அலுவலகத்தின் நான்கு திசையிலும் தடுப்புகள்  அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தும் இத்தனை  காவலையும் மீறி குடும்பத்துடன் ஒருவர் கலெக்டர் அலுவலக வாசலுக்கே மண்ணெண்ணெய்  கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்திருப்பது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thuweer ,Office ,Mechanic Karur Collector ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம்தேதி மக்கள் குறைதீர் கூட்டம்