×

நல்லூர் குளத்தில் கலக்கும் மீன் மார்க்கெட் கழிவுகள் வடிகால் கட்டும் பணி எம்எல்ஏ தலைமையில் தடுத்து நிறுத்தம் மார்த்தாண்டத்தில் பரபரப்பு

மார்த்தாண்டம், மார்ச் 21: மார்த்தாண்டம் - கருங்கல் சாலையில் காளைசந்தை பஸ் நிலையத்தை அடுத்து நல்லூர் குளம் உள்ளது. இந்த குளம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த குளத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் விநியோக திட்டமும் செயல்படுகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன் இந்த குளம் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த குளத்தில் மார்த்தாண்டம் மீன் மார்க்ெகட்டில் இருந்து வரும் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவுகள் கலந்து தண்ணீர் மாசடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ₹1.28 கோடியில் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் நவீன மீன் விற்பனையகம் கட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இங்குள்ள கழிவுகளை வெளியேற்றி நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையுடன் இணைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதற்காக விடுபட்ட இடங்களில் வடிகால் ஓடை கட்டும் பணிகள் நடக்கிறது. இது தவிர மார்க்கெட்டில் உள்ள கழிவறை கழிவுகளும் இந்த வடிகாலில் கலந்து நேரடியாக நல்லூர் குளத்தை சென்றடையும் விதத்தில் வடிகால் பணிகள் மேற்ெகாள்ளப்படுகிறது. இதனால் நல்லூர் குளம் நிரந்தரமாக மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது
இது தொடர்பாக மனோதங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் குழித்துறை நகராட்சி ஆணையரை கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்து, நெடுஞ்சாலைத்துறை கழிவுநீரோடையில் மார்க்கெட் கழிவுகளை திருப்பி விடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென கூறி புகார் அளித்தனர்.

இந்நிலையில், நேற்றும் கழிவுநீர் குளத்தில் கலக்கும் விதத்தில் வடிகால் கட்டும் பணிகள் நடந்தது. இதையடுத்து மனோதங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குழித்துறை நகர திமுக செயலாளர் பொன்.ஆசைதம்பி மற்றும் பொதுமக்கள் சேர்ந்து புதிதாக வடிகால் கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து குழித்துறை நகராட்சி ஓவர்சியர் பிரம்மசக்தி அங்கு வந்தார்.  அவரிடம், துர்நாற்றம் வீசும் மார்க்கெட் கழிவுகள் நல்லூர் குளத்தில் கலக்கும் விதத்தில் நடந்து வரும் வடிகால் பணிகள் குறித்து எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். அப்போது பிரம்மசக்தி, மார்த்தாண்டம் மார்க்கெட் கழிவுகளை திருப்பிவிட தனியாக செப்டிக் டேங்க் கட்டப்படும் என்றும், இதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என கூறினார். அதற்கு எம்எல்ஏ, செப்டிக் டேங்க் கட்டிவிட்டு வடிகால் பணிகளை மேற்கொள்ளுங்கள்.  குளத்தில் கழிவுநீர் தேங்கும் விதத்தில் பணிகள் தொடர்ந்து நடந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இதையடுத்து உயர் அதிகாரிகளிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதாக ஓவர்சியர் கூறிச்சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : halt ,MLA ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...