×

பணத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்தால் 24 மணி நேரத்தில் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்

சேலம், மார்ச் 20: நாடாளுமன்றத் தேர்தல் தணிக்கையின்போது, பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து தொகுதிக்கும் 2வது கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதனிடையே, மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 33 பறக்கும் படை, 33 நிலை கண்காணிப்பு குழு வீடியோ சர்வைலன்ஸ் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இக்குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி ₹50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி முதல் நேற்று வரை நடந்த அதிரடி சோதனையில் ₹76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர, சேலம் வடக்கு தொகுதியில் 276 டிபன்பாக்ஸ்களும், சேலம் மேற்கு தொகுதியில் 15 கிலோ வெள்ளியும், 222 கிலோ துத்தநாகமும் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ₹28 லட்சமும், வெள்ளி பொருட்களும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வணிகம் செய்யும் இடத்தில் இருந்து வங்கிக்கு பணம் எடுத்து சென்றால், வங்கி கணக்கு புத்தகம், வருமான வரித்துறையின் நிலையான கணக்கு எண்ணுக்குரிய அட்டை, வணிகள பதிவுச்சான்று போன்ற ஆவணங்கள் கைவசம் வைத்திருந்தால், அந்த பணம் பறிமுதல் செய்யப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘‘வங்கியில் இருந்து எடுத்து செல்லப்படும் பணத்துக்குரிய வங்கி கணக்குப் புத்தகம், பணம் எடுத்ததற்கான வங்கி சீட்டு, இருப்பின் அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்யமாட்டார்கள். மருத்துவ செலவினத்துக்காக பணம் எடுத்து செல்லும் போது, மருத்துவ சிகிச்சைக்கான உரிய சான்றுகள், ஆதாரங்கள் தாக்கல் செய்தால் பிரச்னை இல்லை. திருமணம் தொடர்பாக பணம் எடுத்த செல்லும் போது, திருமணம் மண்டபம் பதிவு ரசீது, திருமண பத்திரிக்கை, படிவம்- ஏ ஐ, தாக்கல் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஏஜெண்டுகள் கட்சி பொருளாளரால் வழங்கப்பட்ட ரசீது வைத்திருப்பின், ரொக்கமாக ₹1 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த பணத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்தால் அதை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்,’’ என்றனர்.  

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்