குளச்சல், மார்ச் 20: பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை கடந்த 3ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 12ம் நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து எட்டாம் கொடை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்சபூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் எட்டாம் கொடை சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது.
எட்டாம் கொடையை முன்னிட்டு கேரளா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வருகை அதிகமானதால் பொங்கலிடும் பகுதி, கடற்கரை, கடற்கரை செல்லும் சாலை, கோயில் வளாகம் ஆகிய பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்களின் வசதிக்காக மார்த்தாண்டம், களியக்காவிளை, தக்கலை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.