×

பைக்குகளில் அதிவேகமாக செல்லும் சிறுவர்கள்

மார்த்தாண்டம், மார்ச் 20: குமரி மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் வலம் வருவதை சகஜமாக காணலாம். 18 வயதிற்கு உட்பட்டவர்கள், இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றம். இவர்களுக்கு வாகனம் ஓட்டுவதில் அனுபவமும் முதிர்ச்சியும் இருக்காது. மேலும் ஓட்டுநர் உரிமமும் இல்லை. இருப்பினும் சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை பெருமையாக நினைத்து, தங்களின் வாகனங்களை கொடுத்து அனுப்புகின்றனர்.
அவர்கள் போக்குவரத்து மிகுந்த பகுதிகளிலும் வேகமாகவும், தாறுமாறாகவும் சென்று விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்பவர்களையும் அலறியடித்து ஓடச்செய்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் இதுபோன்று வாகனம் ஓட்டிச்செல்பவர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கும் வகையில், போலீசார் அவர்களை பிடித்து, அந்த மாணவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதித்து வந்தனர். இதனால் மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டி செல்வது கணிசமாக குறைந்தது.

இந்த நிலையில் தற்போது போலீசார் இதுபோன்ற சோதனைகளை நிறுத்தி விட்டனர். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டி சென்றாலும் அதை கண்டு கொள்வதில்லை. குறிப்பாக இதுபோல இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்லும் சிறுவர்கள் சற்று வசதி படைத்தவர்கள் அல்லது ஏதாவது அரசு துறையில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளாக உள்ளனர். இதனால் இவர்களை பிடித்தால் தங்களுக்கு பிரச்னை ஏற்பட்டு விடும் எனவும் பல போலீசார் ஒதுங்கி விடுகின்றனர்.இதனால் தற்போது சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோல மைனர் குழந்தைகளிடம் கார்களை கொடுத்து ஓட்டி செல்பவர்களும் உள்ளனர்.மொத்தத்தில் தங்கள் மகிழ்ச்சிக்காக விதிமுறைகளை மீறுவோரால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் இதுபோன்ற செயல்கள் சிலநேரங்களில் அவர்களுக்கு எதிராகவும் திரும்பி விடுகிறது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பெற்றோர் தங்களை திருத்தி கொள்ள வேண்டும். போலீசாரும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு விதிமுறை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : boys ,
× RELATED மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்