×

சீரான குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

சோமனூர், மார்ச் 19:சீரான குடிநீர் விநியோகம் செய்யகோரி சோமனூர் அடுத்த கரவளிமாதப்பூர் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரவளிமாதப்பூர் ஊராட்சியில் வாரம் ஒரு முறை விநியோகம் செய்து வந்த குடிநீர் தற்போது, இரண்டு வாரம் ஆகியும் விநியோகம் செய்யவில்லை. இதனால், குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 250க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கரவளிமாதப்பூர் ஊராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த குடிநீர் வடிகால் வாரிய விளாங்குறிச்சி துணை பொறியாளர் ராதா, கருமத்தம்பட்டி டிஎஸ்பி பாஸ்கரன், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் மக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, மீட்டர் பழுது, தண்ணீர் வழித்தடங்களில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பு போன்ற காரணங்களால் தண்ணீர் விநியோகம் கரவளிமாதப்பூர் ஊராட்சிக்கு தாமதமானது. இவை உடனடியாக சரி செய்யப்பட்டு இன்று முதல் கரவளிமாதப்பூர் ஊராட்சிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Siege ,Panchayat Office ,
× RELATED கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய...