×

கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் அனுமதியற்ற விடுதிகள், ‘பார்’கள்

கோவை, மார்ச் 19: கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் அமைந்துள்ள அனுமதியற்ற விடுதிகள் மற்றும் ‘பார்’களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் மேற்கு ெதாடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்களில், தென்னை மற்றும் விவசாய உற்பத்தி நிறைந்த பகுதியாக பொள்ளாச்சி உள்ளது. தென்னை வளர்ப்பு மற்றும் தென்னையை கொண்டு பல்வேறு மதிப்பு கூட்டுப்பொருட்கள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. பொள்ளாச்சி சந்தையை மையமாக கொண்டு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா வியாபாரிகள் வருகை தருகின்றனர். விளைபொருட்களையும், கால்நடைகளையும் கொள்முதல் செய்கின்றனர். நீர்வளமும், பசுமையும் நிறைந்த இப்பகுதி, சுற்றுலா மையமாக விளங்குகிறது. பல்வேறு திரைப்பட சூட்டிங் இப்பகுதியில் நடக்கிறது.
இயற்கை வளங்கள் நிறைந்த இப்பகுதியை சிலர் தவறான செயலுக்கு பயன்படுத்துகின்றனர்.

விளைநிலங்களில் ஒதுக்குப்புறமான இடத்தை தேர்வுசெய்து ரிசார்ட், கிளப், பண்ணை வீடு என பல்வேறு சொகுசு பங்களாக்களை உருவாக்கி, பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான ரிசார்ட்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ‘பார்’களும் சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படுகின்றன. இளம்தலைமுறையினரை, தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் இவ்வகை ரிசார்ட் மற்றும் கிளப்புகள் இயங்குகின்றன. இவற்றை ஆய்வுசெய்து, அனுமதியின்றி இயங்கும் அனைத்து விடுதிகளையும் ‘சீல்’ வைக்கவேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, செயலாளர் திருஞானசம்பந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் நேற்று அளித்த மனு: கோவை மாவட்டம் முழுவதும் உள்ள சொகுசு விடுதிகள், பண்ணை வீடுகள், ரிசார்ட்கள், கிளப்புகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களை ஆய்வுசெய்ய வேண்டும். அனுமதியின்றி இயங்கும் ‘பார்’களையும் ஆய்வுசெய்ய வேண்டும். பாதிப்புக்கு உள்ளான விவசாய நிலங்கள் மற்றும் மலையிட பகுதிகளை மீட்க வேண்டும். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றச்செயல் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூலம் முழுமையாக விசாரிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Tags : hotels ,farm lands ,bar ,Coimbatore district ,
× RELATED பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு