×

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

சேலம், மார்ச் 19: சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். இதையடுத்து வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (19ம் தேதி) தொடங்கி, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட கலெக்டர் ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இன்று காலை 11 மணி முதல் வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்யலாம். ஒவ்வொரு நாளும் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்துள்ளனர்.
கலெக்டர் அலுவலக பகுதியில் உள்ள 4 சாலையிலும் 200 மீட்டர் தொலைவில் ஒரு எல்லைக்கோடும், 100 மீட்டர் தொலைவில் ஒரு எல்லைக்கோடும் போடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளருடன் வரும் கட்சியினர், 200 மீட்டருக்கு அப்பால் நிறுத்தப்பட்டு விடுவார்கள். 100 மீட்டர் கோடுக்கு உள்ளே 3 கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும். ஒவ்வொரு காரிலும் டிரைவருடன் சேர்த்து 5 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் செல்ல வேண்டும். முன்னதாக வேட்புமனுவை சரிபார்க்கும் அறையில், டெபாசிட் தொகையான ₹25 ஆயிரத்தை வேட்பாளர்கள் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி வேட்பாளராக இருந்தால், ₹12,500 டெபாசிட்டாக செலுத்த வேண்டும். மாற்று வேட்பாளர் வந்திருந்தாலும், அவர் தனியாகவே தன்னுடன் 4 பேருடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான இந்த விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர்.  இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ரோகிணியிடம் கேட்டபோது, ‘‘வேட்புமனு தாக்கல் 19ம் தேதி (இன்று) தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. இடையில் வரும் 23ம் தேதி, மாதத்தின் 4வது சனிக்கிழமையன்று அரசு பொதுவிடுமுறை. அதனால், அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் இல்லை. ஒவ்வொரு வேட்பாளரும், விதிமுறைகளை கடைபிடித்து, மனுதாக்கல் செய்ய வேண்டும்,’’ என்றார்.

வேட்புமனு தாக்கல் வரும் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளதால், கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பை மாநகர கமிஷனர் சங்கர் தலைமையிலான போலீசார் செய்துள்ளனர். ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். தேர்தல் விதி மீறல்கள் நடக்கிறதா? என்பதை பார்க்க அதிகாரிகள் குழு தனியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Salem Collector ,
× RELATED காந்தி நினைவுநாள் அனுசரிப்பு