×

வருவாய் உள்வட்டம் பிரிப்புக்கு எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 19: அஞ்செட்டி அருகே வருவாய் உள்வட்டம் பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி நாட்றாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அத்திமரத்தூர் கிராமம், கேரட்டி உள்வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், அத்திமரத்தூர் கிராம மக்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். வெகுதொலைவில் உள்ள கேரட்டி கிராம உள்வட்டத்துடன் அத்திமரத்தூரை இணைத்துள்ளதால் பட்டா, சிட்டா போன்றவற்றை வாங்குவதற்கு, வருவாய் அலுவலர்களை சந்திக்க காலதாமதம் ஏற்படும். எனவே, அத்திமரத்தூரை நாட்றாம்பாளையம் உள்வட்டத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். மேலும், அத்திமரத்தூருக்கு மயான வசதி செய்து தர வேண்டும் என கோரி வந்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நேற்று காலை அஞ்செட்டி-ஒகேனக்கல் சாலையில் திரண்டனர். பின்னர், தனியார் பள்ளி பஸ்கள் மற்றும் அரசு பஸ்களை சிறைபிடித்து 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அஞ்செட்டி போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.  இப்போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இதேபோல், தேன்கனிக்கோட்டை அருகே கெத்தள்ளி கிராம மக்கள், குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்தனர்.
தாசில்தார் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சீரான குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Road villagers ,anti-villagers ,
× RELATED வருவாய் உள்வட்டம் பிரிப்புக்கு எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்