×

நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம் தேர்தல் விதிமீறலை 24 மணி நேரமும் கண்காணிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தயார்

விருதுநகர், மார்ச் 19: விருதுநகர் எம்பி தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று முதல் தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
2019 நாடாளுமன்ற தேர்தலில், 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்.18ல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 முதல் 26 வரை, வேட்புமனு பரிசீலனை மார்ச் 27, வாக்குப்பதிவு ஏப்.18ல் நடக்கிறது. வேட்புமனுக்கள் தொடர்பான சந்தேகங்கள், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் புகார்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அறை செயல்படுகிறது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சிவஞானம் அல்லது மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் லட்சுமி பிரியா ஆகியோரிடம் தாக்கல் செய்யலாம்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுக்கள் காலை 11 மணி  முதல் மாலை 3 மணி வரை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அல்லது சாத்தூர் வட்டாட்சியர் ஆகியோரிடம் தாக்கல் செய்யலாம். வேட்புமனு படிவம் 26ல் உள்ள அனைத்து கேள்விக்கும் பதில் அளித்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யாமல் விடப்பட்டு இருந்தால் தேர்தல் அலுவலகத்தின் மூலம் வேட்பாளருக்கு அறிவுறுத்தல் செய்யப்படும். அதை தொடர்ந்து மறு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.

மொத்த வாக்காளர்கள்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர்,  அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டமன்ற  தொகுதிகள் உள்ளன. இதில் 7,14,606 ஆண் வாக்காளர்களும், 7,44,588 பெண்  வாக்காளர்களும், 123 திருநங்கைகள் என மொத்தம் 14,59,266 வாக்காளர்கள்  உள்ளனர்.

இதுவரை வெற்றி பெற்றவர்கள்

1967ல் சுதந்திரா கட்சி, 1971, 1977ல்  காங்கிரஸ், 1984, 1989, 1991ல் அதிமுக, 1996ல் சிபிஐ, 1998, 1999, 2004ல்  மதிமுக வெற்றி பெற்றது. 2008 தொகுதி சீரமைப்பில் சிவகாசி தொகுதி விருதுநகர் தொகுதியாக மாறியது. அதை தொடர்ந்து  2009ல் மாணிக்கம் தாகூர் (காங்), 2014ல் ராதாகிருஷ்ணன் (அதிமுக) வெற்றி  பெற்றனர். இன்று வரை நடைபெற்றுள்ள நாடாளுமன்ற  தேர்தல்களில் அதிமுக 4 முறை, காங். 3 முறையும், மதிமுக 3 முறையும், சிபிஐ  ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2014 தேர்தலில் அதிமுக, மதிமுக,  திமுக, காங்கிரஸ் என 4 முனை பேட்டி இருந்த போது அதிமுக வேட்பாளர்  ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 4,06,694. மதிமுக வேட்பாளர் வைகோ பெற்ற  வாக்குகள் 2,61,143. திமுக வேட்பாளர் ரத்தினவேல் பெற்ற வாக்குகள் 2,41,505,  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் பெற்ற வாக்குகள் 38,482. அதிமுக  வேட்பாளர் மதிமுக வேட்பாளரை விட 1,45,551 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி  பெற்றார். தற்போதுள்ள கூட்டணிப்படி கடந்த தேர்தலில் திமுக, மதிமுக,  காங்கிரஸ் கட்சிகள் பெற்ற ஓட்டுகள் 5,41,130. வெற்றி பெற்ற அதிமுக  வேட்பாளரை விட 1,34,436 வாக்குகள் அதிகம் பதிவாகி உள்ளது.

விருதுநகர் எம்பி தொகுதி வரலாறு
விருதுநகர் தொகுதி 1951 முதல் 1967 முன் வரை பழைய ராமநாதபுரம் தொகுதியாக  இருந்தது. 1967 முதல் சிவகாசி தொகுதியாக மாற்றப்பட்டது. இதில், விருதுநகர் மாவட்ட  சட்டமன்ற தொகுதிகளுடன், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி இணைந்திருந்தது. கடந்த தேர்தல்களில் சிவகாசி தொகுதியாக இருந்து  விருதுநகர் தொகுதியாக மாறியது. இதில், விருதுநகர்,  அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, மதுரை மாவட்டத்தில் திருமங்கலம்,  திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகள் இணைக்கப்பட்டது.

Tags : elections ,Lok Sabha ,office ,Collector ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...