×

தேர்தல் நடத்தைவிதி எதிரொலி புதுப்பொலிவு பெற்று வரும் சுவர்கள் விளம்பரங்கள் அழிப்பால் ‘பளிச்’

சிவகங்கை, மார்ச் 19: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலக சுவர்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளையடிக்கப்படுவதால் கட்டிடங்கள் புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றன.
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், கல்வி, மின்வாரியம், வனம், கருவூலம், தொழில் மையம், வேளாண் மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. தாலுகா அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் வேறு இடங்களில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகின்றன. புதுவாழ்வு திட்டம், மகளிர் திட்டம், குடிநீர் வடிகால் வாரியம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளைஞர் நீதிக்குழுமம்(சிறுவர் நீதிமன்றம்), வணிகவரித்துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்கள், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, இஎஸ்ஐ, நில எடுப்பு பிரிவு, வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. மார்ச் 10ல் தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானது.

இதையடுத்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலக சுவர்கள், பாலங்கள், சுற்றுச்சுவர்களில் இருந்த போஸ்டர்கள், விளம்பரங்கள் அகற்றப்பட்டன. போஸ்டர்களை அகற்றி சுவர்களின் மேல் இருந்த அழுக்குகள் அனைத்தையும் பணியாளர்கள் சுரண்டி எடுக்கின்றனர். தொடர்ந்து சுற்றுச்சுவர்கள், முன்பக்க சுவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்டிடங்களும் முழுவதும் வெள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கட்டிடங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றது. எந்த போஸ்டர், விளம்பரங்கள் ஏதுமின்றி கட்டிடங்கள், சுவர்கள், தடுப்புச்சுவர்கள் அனைத்தும் அழகாக காட்சி தருகின்றன. தேர்தலை காரணமாக வைத்து சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் சில கட்டிடங்கள் பொதுப்பணித்துறை சார்பில் சிறிய அளவில் மராமத்துப்பணியும் செய்யப்படுகிறது.
அரசு அலுவர் ஒருவர் கூறுகையில், ‘‘அரசு அலுவலக சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டவோ, விளம்பரங்கள் செய்யவோ கூடாது என ஏற்கனவே விதிமுறை இருந்தும் அதை யாரும் பின்பற்றுவதில்லை. அப்படி செய்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடடிக்கை எடுப்பதில்லை. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அனைத்து சுவர்களும் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இதே போல் தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

Tags :
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்