தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டியில் வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் துவக்கம்

தேனி, மார்ச் 19: தேனி பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் இன்று முதல் துவங்க உள்ளது.
தேனி பாராளுமன்றத் தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (19ம் தேதி) துவங்க உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுத்தாக்கல் வருகிற 26ம் தேதி வரை நடக்க உள்ளது. வருகிற 27ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்க உள்ளது. வருகிற 29ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான 29ம் தேதியன்று எத்தனை பேர் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனரோ, அத்தனைபேருக்கும் அவரவருக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும். இதனையடுத்து, தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 23ம் தேதி நடக்க உள்ளது.

இதில் தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக தேனி கலெக்டர் பல்லவிபல்தேவ் உள்ளார். எனவே, தேனி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பல்லவிபல்தேவிடமும், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணகியிடமும், பெரியகுளம்(தனி) சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பெரியகுளத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்ரீத்தாவிடமும் வேட்புமனுத்தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags : Theni ,Periyakulam ,Andipatti ,start ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது