×

முகவரி கேட்பது போல் நடித்து கொள்ளை ஹெல்மெட் வாலிபர்கள் சிக்கினர்

திருப்போரூர், மார்ச் 19: சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், படூர், சாத்தங்குப்பம், புதுப்பாக்கம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து போலீசார், முக்கிய இடங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த பொதுமக்களை அறிவுறுத்தினர். மேலும், கேளம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஒரு தனிப்படையும், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி, புதுப்பாக்கம் சந்திப்பு அருகே கேளம்பாக்கம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர், ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்தனர். அவர்களை மடக்கி நிறுத்திய போலீசார், விசாரித்தனர். அதில், இருவரும் கேளம்பாக்கம் பகுதிகளில் நகை மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என தெரிந்தது.

 இதையடுத்து அவர்களை, காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், செங்கல்பட்டு அடுத்த பரனூரை சேர்ந்த ராஜேஷ் (28), வெண்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (எ) ராஜி (21) என தெரிந்தது. மேலும் விசாரணையில், இருவரும் ஹெல்மெட் அணிந்து கொண்டு கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கேளம்பாக்கம், படூர், புதுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி, ₹6 லட்சம் மதிப்புள்ள 27 சவரன் தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட 2 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நகை திருடியவர்கள் கைது
வேளச்சேரி: சென்னை சாஸ்திரி நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை அருகே சென்றனர். அப்போது, ஒரே பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், மயிலாப்பூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சத்யா  (19), சுரேஷ்  (21) என தெரிந்தது. மேலும் விசாரணையில்,  கடந்த 13ம் தேதி பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்த ஒரு பெண்ணிடம் 4 சவரன் தங்க செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து, அவர்கள், கொடுத்த தகவலின் பேரில் 2 சவரன் தங்க நகை, 6 செல்போன்கள், பைக் ஆகியவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : plunder helmet ,men ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்