மாத்தூர் புதிய டோல்கேட்டில் கூடுதல் சுங்கக்கட்டணம் வசூல்

திருவொற்றியூர்:  மணலி, மாத்தூர் அருகே மாதவரம் 200அடி சாலையில் புதிய சுங்கச்சாவடி, கடந்த மாதம் 20ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியில் நேற்று காலையில் காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரிகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டேங்கர் லாரி டிரைவர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்து, டிரைவர்கள் கோஷமிட்டனர்.   

இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் பால்பண்ணை போலீசார் அங்கு விரைந்து வந்து டிரைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரின்  சமரசத்தை ஏற்று டிரைவர்கள் லாரிகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து டிரைவர்கள் கூறுகையில், ‘‘புதிய சுங்கச்சாவடியால் லாரி  டிரைவர் மற்றும் உரிமையாளர்களுக்கு வரிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, உடனே புதிய சுங்கச்சாவடியை ரத்து செய்ய வேண்டும்’’ என்றனர்.

Tags : tokket ,Maturur ,
× RELATED சேலம் செவ்வாய்பேட்டை லாரி...