×

நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்பங்களின் பீடம் இடித்து அகற்றம்

நாகர்கோவில், மார்ச் 19 : நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்பங்களின் பீடங்களையும் ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர்.தமிழகத்தில் ஏப்ரல் 18ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகளின் கொடிகளையும் அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள். நாகர்கோவிலில் அரசியல் கட்சிகளின் கொடிகளுடன், கொடி கம்பங்களையும் அதிகாரிகள் அகற்றினர். இரும்பினால் ஆன கொடி கம்பங்களை அறுத்து எடுத்தனர். 72 மணி நேரம் அவகாசம் அளித்தும் அரசியல் கட்சிகள் கொடி கம்பங்களை துணியால் மூடாததால் அவற்றை அறுத்து எடுக்கிறோம் என அதிகாரிகள் கூறினர். இந்த நிலையில் நேற்று காலை முதல் நகரின் முக்கிய பகுதிகளில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு இருந்த பீடங்களையும் ஜே.சி.பி. மூலம் இடித்து அகற்றினர்.

டதி ஸ்கூல் சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்பட நகரின் முக்கிய இடங்களில் பீடங்களும், அரசியல் கட்சிகளின் கல்வெட்டுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ஜே.சி.பி. மூலம், நகராட்சி பணியாளர்கள் பீடங்களை இடித்து கொண்டிருந்த போது அங்கு திமுகவினர் திரண்டனர். தேர்தல் விதிமுறைப்படி கொடி கம்பங்களை தான் அகற்றுகிறோம் என்று கூறினீர்கள். இப்போது பீடங்களையும் இடிப்பது ஏன்? மீண்டும் எப்படி இங்கு கொடி கம்பம் அமைக்க முடியும் என்றனர். அப்போது நகராட்சி பணியாளர்கள் உயர் அதிகாரிகள் உத்தரவின்படி அகற்றுகிறோம். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்றனர். இதனால் திமுகவினருக்கும், நகராட்சி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து திமுகவினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கொடி கம்பங்கள் அறுத்தெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பீடத்தையும் இடித்து அகற்றியது அரசியல் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Nagercoil ,party ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...