×

திருப்பூரில் சுட்டெரிக்கும் வெயில் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மேற்கூரை அமைக்க வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 15: தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில், ஆயிரக்கணக்கான விவசாயிகளும், மொத்த வியாபாரிகளும் வெயிலில் காத்திருக்க வேண்டியிருப்பதால், மேற்கூரை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டு பகுதியில், தென்னம்பாளையம் மொத்த விற்பனை மார்க்கெட், சில்லரை விற்பனை மார்க்கெட், உழவர் சந்தை இயங்கி வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும், தங்களது விளைபொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். மொத்த விற்பனை மார்க்கெட்டில் மட்டும் தினமும் ஐந்து டன் எடையுள்ள காய்கறிகள், கீரைகள் விற்கப்படுகின்றன. எவ்வித வசதியும் இல்லாமல் இருந்த தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இருப்பினும், வளாகம் முழுவதும் தளம் அமைக்காததால், மேற்கு பகுதியில் தரையில் வைத்து, வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. மார்க்கெட் முழுவதும் மேற்கூரை வசதி இல்லாததால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெயிலால் அவதிப்படுகின்றனர். தக்காளி, கீரை வகைகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி உள்ளிட்ட சில விளைபொருட்கள் வெயில் கொடுமை தாங்காமல் எளிதில் வாடிவிடுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நாள் முழுவதும் கொளுத்தும் வெயிலில் காத்திருப்பதால், விவசாயிகளுக்கும் உடல் நலக்கோளாறு ஏற்படுகிறது. விவசாயிகள் நலன் கருதியும், விளைபொருட்களை பாதுகாப்பாக வைத்திருந்து விற்க ஏதுவாகவும், மேற்கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tags : house ,Tirunelveli ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்